/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_178.jpg)
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (24.7.2023) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சினைகள்குறித்து மனுக்களை வழங்கினர்.
இதேபோல் ஈரோடு மொடக்குறிச்சி தாலுகா, 46 புதூர் கிராமம், ஈ.பி.நகர், வாய்கல்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார்,தனது மனைவி சுசீலாவுடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது; “46 புதூர் கிராமம் குதிரைப்பாளி ஊரில் ஒருவருக்குச் சொந்தமான ஒன்னரை ஏக்கர் பூமியைக் கடந்த 2018 ஆம் வருடம் முதல் ஒப்பந்தம் மூலம் வாடகைக்குப் பெற்று மணல், ஜல்லி ஆகியவற்றை இருப்பு வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். இதைப்போல் விவசாயம் மற்றும் கால்நடைகளையும் வளர்த்து வருகிறேன்.
இந்நிலையில் இடத்தின் உரிமையாளர் இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி மேற்படி நிலத்தினை 15 வருடத்திற்குக் குத்தகைக்குப் பேசி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இருவரும் வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை பூந்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து அந்த ஆவணத்தின் சரத்துகளை அனுசரித்து மேற்படி நிலத்தில் தொடர்ந்து அனுபவித்து வந்த நிலையில் சமீப காலமாக உரிமையாளர் மனைவி அவ்வப்போது வாடகையை உயர்த்திக் கொடுக்கும்படி தொந்தரவு செய்கிறார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி வீட்டில் நாங்கள் இருந்தபோது உரிமையாளர் மனைவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்களைப் பார்த்ததும் 10ம் வகுப்பு படிக்கும் எனது மகன் பயந்துவிட்டான். வாடகைப் பத்திரத்தை உடனடியாக ரத்து செய்து கொடுக்க வேண்டும். இடத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தையே அழித்து விடுவேன் என்று உரிமையாளர் மனைவி எங்களை மிரட்டினார்.
இதைப் பார்த்துப் பயந்து எனது மகனுக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டது. பயத்தால் அவனைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளோம். தொடர்ந்து அவர்களிடம் இருந்து மிரட்டல் வருகிறது. என்னைக் கடத்திச் சென்று குத்தகைப் பத்திரத்தைச் சட்டத்துக்குப் புறம்பாக ரத்து செய்யும் நோக்கத்துடன் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் நானும் வெளியிடங்களுக்குச் செல்வதில்லை. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி எனது குடும்பத்திற்குப் பாதுகாப்பு தந்து எங்களை மிரட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)