Skip to main content

ஒரு கோடி ரூபாய் கொள்ளை; நண்பனிடம் நாடகமாடிய விவாசாயி - சிக்கிக்கொண்டது எப்படி?

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

Farmer arrested in Salem robbery case of one crore rupees

 

ஆத்தூர் அருகே வீட்டில் இருந்த ஒரு கோடி ரூபாய் கொள்ளை போனதாகக் கூறப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக புகார் அளித்த விவசாயியே பணத்தைப் பதுக்கி வைத்து நாடகமாடியது தெரியவந்துள்ளது. 

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சார்வாய்புதூர் சாமியார் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (48). விவசாயி. இவர் தனது மனைவி, தாயாருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். டிச. 7ம் தேதி இரவு அந்த வீட்டில் இருந்த நகை, பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக தலைவாசல் காவல்நிலையத்தில் லோகநாதன் புகார் அளித்தார். 

 

அந்தப் புகாரில் லோகநாதன்,  “ஆத்தூர் மணிவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன் என்பவரும் நானும் நண்பர்கள். அவரும், அவருடைய மகன் கோபாலகிருஷ்ணனும் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரண்டு பெரிய பைகளில் 2 கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறி, என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர். அதில் ஒரு கோடி ரூபாய் இருந்த ஒரு பையை மட்டும் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்.  

 

இதையடுத்து, ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவலர்கள் புகார்தாரர் மற்றும் அவரிடம் பணம் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட கணேசன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இரண்டு கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது? என்று விசாரித்தபோது, மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். அப்போது கணேசன், தன்னுடைய பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு லோகநாதன் கொள்ளை போய்விட்டதாக நாடகம் ஆடுவதாக கூறினார். அதையடுத்து காவல்துறையினர் லோகநாதனிடம் விசாரணையின் போக்கை மாற்றினர். அப்போதும் அவர், முகமூடி கொள்ளையர்கள்தான் கைவரிசை காட்டியதாகவும், அவர்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு பின்பக்கம் உள்ள கரும்பு தோட்டத்தின் வழியாக தப்பிச்சென்றதாகவும் கூறியுள்ளார்.  

 

இதனைத் தொடர்ந்து கரும்பு தோட்டத்திற்கு அவரை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தோட்டத்தில் ஓரிடத்தில் பெரிய டிராவல் பேக் ஒன்றில் ஒரு கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அந்தப் பணத்தை உடனடியாக போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையே, ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன், தனது பணம் ஒரு கோடி ரூபாயைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி லோகநாதனிடம் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை அவர் திருடிக் கொண்டார் என்றும் புகார் அளித்து இருந்தார்.  

 

அந்தப் புகாரின்பேரில் லோகநாதன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். லோகநாதன் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக நான் பலரிடம் கடன் வாங்கி இருந்தேன். நாளடைவில் எனக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இந்த நிலையில்தான் என் நண்பர் கணேசன் ஒரு கோடி ரூபாயைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி என்னிடம் கொடுத்து இருந்தார்.

 

அந்தப் பணத்தை நான் தினமும் பார்த்து வந்தேன். ஒரு பக்கம் கடன் சுமை, இன்னொரு பக்கம் கைக்கு எட்டிய தூரத்தில் ஒரு கோடி ரூபாய் இருந்ததால் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டேன். அதன்பிறகு முகமூடி கொள்ளையர்கள் பணத்தை திருடிச் சென்றதாக நாடகமாடினேன்.  ஆனால் காவல்துறையினரின் கிடுக்கிப்பிடியால், அந்தப் பணத்தை கரும்பு தோட்டத்திற்குள் போட்டுவிட்டு, முகமூடி கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பிச் சென்றதாகக் கூறினேன். தற்போது என் நாடகம் எல்லாம் அம்பலமாகி சிக்கிக் கொண்டேன்'' என்று கூறியுள்ளார்.  

 

நண்பனின் பணத்தைத் திருடிக் கொண்டு, முகமூடி கொள்ளையர்கள் திருடியதாக நாடகமாடிய வழக்கில் விவசாயி சிக்கிய சம்பவம் தலைவாசல் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்