
கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் சிவாஜிராவ்வாக பிறந்து தமிழ்நாட்டில் கோ.பாலசந்திரன் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் கதையின் நாயகனுக்கு நண்பர் கதாபாத்திரத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டார் ரஜினிகாந்த். அபூர்வ ராகம் திரைப்படம் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது.
கறுப்பு நிறம், ஒல்லியான தேகம் இவரெல்லாம் எங்கே சினிமாவில் வெற்றி பெறப்போகிறார் என்கிற விமர்சனங்களைக் கடந்து சினிமாத்துறையில் கறுப்பாக இருப்பவர்கள் வெற்றி பெறமுடியாது என்கிற சென்டிமென்ட்டை உடைத்து தமிழ் திரையுலகில் உச்ச நடத்திரமாக இருக்கிறார் ரஜினிகாந்த்.
முதல் திரைப்படம் வெளியான 1975 கணக்குப்படி 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதியோடு திரைத்துறையில் 50வது ஆண்டு பயணத்தை ரஜினிகாந்த் தொடர்கிறார். அவர் திரைத்துறையில் நுழைந்த காலத்தில், அவருக்கு பின் திரைத்துறைக்கு வந்தவர்கள் துணை கதாபாத்திரத்துக்கு மாறிவிட்ட நிலையில் கடந்த 50 ஆண்டுகாலமாக தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், இந்திய சினிமாவில் 75 வயதிலும் திரை நாயகராகவும், வசூல் சக்கரவர்த்தியாக, பாக்ஸ்ஆபிஸின் உச்சத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த்.

2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி ரஜினியின் 51வது ஆண்டு கலைப்பயணம் தொடங்குகிறது. அன்றைய தினம் தான் ரஜினியின் கூலி திரைப்படம் வெளியாகிறது. அவரின் 50வது ஆண்டு கலைப்பயணத்தை கோடம்பாக்கம் கொண்டாடவில்லை என்று ரசிகர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். தங்களது தலைவரின் 50வது ஆண்டு வெற்றிகரமான கலைப்பயணத்தை பெரும் விழா நடத்திக் கொண்டாட விரும்புகிறோம் என ஒருங்கிணைந்த வேலூர் ரஜினி ரசிகர் மன்றத்தினர் சோளிங்கர் நகரில் மே 12ஆம் தேதி கூட்டம் நடத்தித் தங்கள் விருப்பத்தை தலைமைக்குக் கடிதம் எழுதி தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தினர், தலைவருக்கு ரசிகர்கள் சார்பாக விழா எடுக்கத் தலைவரிடம் பேசி அனுமதி வாங்கித்தருமாறு மன்ற தலைமைக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் இயற்றியுள்ளனர். அதேநேரத்தில் ரஜினிக்கு அவரது வெற்றிகரமான திரைப்பயணத்தை பாராட்டி அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மா.செ சோளிங்கர் என்.ரவியிடம் கேட்டபோது, அரை நூற்றாண்டு காலமாக ரசிகர்களான எங்களையும், தமிழக மக்களையும் மகிழ்விக்க 75 வயதிலும் உழைப்பின் உச்சமாகவும், ஜாதி, மத பேதமற்ற ஆன்மீகத்தாலும், தேச பக்தியோடு விளங்குகிறார் எங்கள் தலைவர். மனிதாபிமானம் உடையவர், திரைத்துறையில் அவரின் சாதனை, 75 வயதிலும் வெற்றிகரமான இந்திய நடிகராக, இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளாகத் தனது கலைப்பயணத்தை தொடர்பவர், தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்குத் தனது கலையால் பெருமை சேர்த்தவர். மேடைகளில் தற்பெருமை இல்லாமல் நேர்மையான, உண்மையான யதார்த்த பேச்சுகளால் மக்களின் கவனத்தை ஈர்ப்பவர். திரையில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ வாக வாழ்பவர். தன்னை நேசிப்பவர்கள் மத்தியில் ஆன்மீகத்தால் பேதங்களை ஒழித்தவர். தேசப்பற்று மூலம் இளைஞர்களின் வழிகாட்டியாக இருப்பதை பாராட்டி அவர் வாழும் காலத்திலேயே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் தலைவருக்கு ரசிகர்களான நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராட்டு விழா நடத்த விரும்புகிறோம், அதற்காகவே எங்கள் மாவட்டத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பியுள்ளோம். தலைவர் அனுமதி தரும்பட்சத்தில் பிரமாண்டமாக விழா எடுப்போம்” என்றார்.