/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1005.jpg)
நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு விசாரணையை ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை ஆர்.ஏ.புரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவரது மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மே 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதால், வழக்கை முடிக்கும்வரை அவருக்கு பணிநீட்டிப்பு வழங்க வேண்டுமென ஏ.ஏ.மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மோகன் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே பல நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து உள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினை தொடர்ந்து ஒரு மாதத்தில் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரை 57 சாட்சிகள், 176 ஆவணங்கள் மற்றும் 42 சான்று பொருட்கள் விசாரிக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போதைய விசாரணை நீதிபதி மே 31 ஆம் தேதியுடன் பணி ஓய்வுபெற உள்ளதால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை ஒரு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் வழக்கு முடிக்கப்படாமல் இருப்பதாகவும், எனவே புதிய நீதிபதி கொண்டு விசாரணை தொடங்குவதும், குற்றச்சாட்டப்பட்ட நபர்கள் அரசியல் மற்றும் பணபலம் மிக்கவர்கள் என்பதாலும் மேலும் வழக்கை காலதாமதமாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே தற்போதுள்ள நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனவும், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மே 24 ஆம் தேதி கோரிக்கை மனு அனுப்பியதாகவும், இந்த வழக்கு முடியும் வரை தற்போது உள்ள நீதிபதியே தொடர்ந்து வழக்கை விசாரிக்க அனிமதிக்க வேண்டும். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவில், தற்போது வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்ற நீதிபதி பணி ஓய்வு பெற்று விட்டதால் அவருக்குப் பணி நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இல்லை என தெரிவித்துவிட்டனர். காலியாக உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை 15 தினங்களுக்குள் உயர்நீதிமன்ற பதிவாளர் நிரப்ப வேண்டும் என்றும், சம்மந்தப்பட்ட நீதிபதி தினந்தோறும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கு விசாரணையை தள்ளிவைக்க கூடாது என்றும், விசாரணையை ஜூலை இறுதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)