
பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்குத் தண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை என்று 20-க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில், அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலத்தை சுப்பையாவும், பொன்னுச்சாமியும் உரிமை கோரி வந்த நிலையில், அந்த நிலம் டாக்டர் சுப்பையாவுக்கு சாதகமாக கீழ் நீதிமன்றத்தில் தீர்ப்பாகியுள்ளது.
இந்த நிலப் பிரச்சனை தொடர்பாக இருந்து வந்த முன்பகை காரணமாக டாக்டர் சுப்பையா படுகொலை செய்யப்பட்டதும், இதற்கு அரசுப் பணியிலிருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், வழக்கறிஞரான மகன் பாசில், என்ஜினீயரான மகன் போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ருவர் ஆகிவிட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது. அரசுத் தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.
சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் ஜூலை 28- ம் தேதி முடிவடைந்த நிலையில், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பைத் தள்ளிவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (4-ஆம் தேதி) தீர்ப்பளித்த நீதிபதி அல்லி, குற்றஞ்சாட்டப்பட்ட ஐயப்பன் தவிர, மற்ற 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார்.

9 பேருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர். இதையடுத்து தண்டனையை அறிவித்த நீதிபதி அல்லி, குற்றவாளிகள் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், மற்றும் போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் , முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு, கொலை மற்றும் கூட்டுச்சதி பிரிவுகளில் இரட்டை தூக்குத் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், இதனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார். ஐயப்பன் என்பவர் அரசு சாட்சியானதால் அவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.