Family struggle viluppuram collector office outside

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை கேட்பு கூட்டத்திற்கு வந்தனர். திடீரென அவர்கள் அனைவரும், தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

Advertisment

அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது கண்ணன், “எனக்கு சொந்தமான காலி மனையில் அரசு தொகுப்பு வீடு கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து வீடு கட்டும் பணியில் ஈடுபட்டோம். வீட்டுக்கு அருகில் உள்ள சிலர், எங்களை வீடு கட்டக்கூடாது என்று பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த விவகாரத்தில், போலீசார் கிராம நிர்வாக அலுவலர், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி இடத்தை அளந்து காட்டினர். அதை அக்கம்பக்கத்தினர் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, என் வீடு கட்டும் பணியை கடந்த இரண்டு மாதங்களாக தடுத்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் சம்பந்தப்பட்டவர்கள் எங்களை குடும்பத்தோடு கொலை செய்வதாக மிரட்டி வருகின்றனர். ஒரு வீடு கட்டி குடியிருக்க கூட அனுமதி இல்லை என்றால் எப்படி வாழ்வது. அதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம்” என்று கூறியுள்ளார். அதே இடத்தில் அவரது கோரிக்கையை மனுவாக எழுதி வாங்கிய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கண்ணன் குடும்பத்தினரிடம் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.