
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள். இவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் அரசால் 2 சென்ட் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆக்கிரமித்ததோடு, அவர்களது பட்டாவையும் வாங்கி வைத்துக்கொண்டுள்ளார். இவர்கள் பல முறை கேட்டும் ஒரிஜினல் பட்டாவைக் கொடுக்காமலிருந்துள்ளார்.

இதையடுத்து வெள்ளையம்மாள், தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. மேலும், பட்டாவைக் கேட்டுச் சென்ற போது, வெள்ளையம்மாள், அவரது மகன் மற்றும் குடும்பத்தினரை முருகனும் அவரது தம்பி முனுசாமி என்பவரும் மிரட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து, வெள்ளையம்மாள் தனது மகன், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட 10 பேருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்துள்ளனர்.

அவ்வாறு வந்தவர்கள், கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றுள்ளனர். மண்ணெண்ணெய் கேனுடன் வருவதைக் கண்ட பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார், அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேன்களை கைப்பற்றினார்கள். அதன்பின், அந்த பத்து பேரையும் மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரித்த மாவட்ட கலெக்டர் விசாகன், அவர்களது புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.