The family strike the trucks demanding the find the dog

Advertisment

அரியலூர் மாவட்டம் அருகே உள்ளது தாமரைக்குளம் ஊராட்சி. இந்த ஊரின் அருகே உள்ளது ராம்கோ தனியார் சிமெண்ட் ஆலை. இந்த ஆலை அலுவலர்கள் குடியிருப்பு எதிரே தாமரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது ராஜகோபால் என்பவர் வீடு கட்டி வசித்துவருகிறார். இவர் தனது வீட்டு பாதுகாப்புக்காக நாய் ஒன்றை வளர்த்துவருகிறார். ராஜகோபாலும் அவரது குடும்பத்தினரும் அதை மிகவும் பாசமாக வளர்த்துவந்தனர். அது அவர்கள் குடும்பத்திற்கு மிகவும் பாதுகாப்பாக காவல் இருந்தது. இந்நிலையில்,நேற்று முன்தினம் (16.12.2021) காலைமுதல் அந்த நாயைக் காணவில்லை.

ராஜகோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் நாயைப் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர், கிடைக்கவில்லை. பலரிடம் விசாரித்தபோது, ‘சிமெண்ட் ஆலை ஊழியர்கள் தெருவில் சுற்றிய நாய்களைப் பிடித்துச் சென்றனர். அவர்கள் உங்கள் நாயையும் சேர்த்து பிடித்துச் சென்றிருக்கலாம்’ என்று தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, அந்த சிமெண்ட் ஆலை முன்பாக பாதுகாப்புக்கு இருந்த செக்யூரிட்டி ஆட்களிடம் சென்று ராஜகோபால் விசாரித்துள்ளார். அவர்கள், ‘ஆலை நிர்வாகம் சில வெளியாட்கள் மூலம் நாய்களைப் பிடித்துச் செல்லுமாறு கூறியது. அதன்படி அவர்கள் நாய்களைப் பிடித்துச் சென்றார்கள். அதில் உங்களது நாய் இருக்குமா என்பது தெரியாது.

The family strike the trucks demanding the find the dog

Advertisment

அந்த நாய்கள் இப்போது உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை’ என்று பகீர் தகவலைக் கூறியுள்ளனர். இதைக்கேட்டு கோபமுற்ற ராஜகோபால் குடும்பத்தினரும் நண்பர்களும் தங்கள் நாயைக் கண்டுபிடித்து தரக் கோரி அந்த சிமெண்ட் ஆலை முன்பு மறியல் செய்தனர். அதோடு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வெளியே வந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளையும் சிறை பிடித்தனர். இந்தத் தகவலை அதிகாரிகள் அரியலூர் காவல்துறைக்குத் தெரிவித்தனர். அங்கிருந்து விரைந்துவந்த காவல்துறையினர் ராஜகோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராஜகோபால், “எனது வளர்ப்பு நாயைத் தெரு நாய்களுடன் எப்படி சேர்த்து பிடித்துச் செல்ல முடியும்.

எனவே எனது நாய் எங்கிருந்தாலும் இங்கு கொண்டு வர வேண்டும் அல்லது எங்கு கொண்டுபோய் விட்டார்கள் என்பதைத் தெரிவித்தால் நாங்கள் அங்கு சென்றுதேடி அழைத்து வந்துவிடுவோம்” என்று கோரிக்கை வைத்தனர். இதை ஆலை நிர்வாகத்திடம் போலீசார் தெரிவித்தனர். ஆலை நிர்வாகம் அதுகுறித்து விசாரித்து காலையில் தகவல் அளிப்ததாகக் கூறியுள்ளனர். இதையடுத்து ராஜகோபால் குடும்பத்தினரும் நண்பர்களும்காவல்துறை கேட்டுக்கொண்டதற்கிணங்க சிறைபிடித்த லாரிகளை விடுவித்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். ஆசையாக வளர்த்த நாய் எங்கு உள்ளதோ என்னானதோ என்ற தவிப்பிலும் சோகத்திலும் தொடர்ந்து தேடிவருகிறார்கள் ராஜகோபால் குடும்பத்தினர்.