family in poor condition by corona virus mother child incident

Advertisment

விழுப்புரம் நகரில் உள்ளது பாப்பான்குளம் பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா, இவரது மகன் சாதிக்பாட்ஷா(35), இவரது மனைவி யாஸ்மீன் என்கிற விஷ்ணுபிரியா (28). கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு யாஸ்மினுக்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தகுழந்தைக்கு ஹாலய பானு என்று பெயர் வைத்துள்ளனர்.

கடந்த 28ஆம் தேதி இரவு குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு யாஸ்மின் தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அந்த பச்சிளம் குழந்தை இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அவரது கணவர் சாதிக் பாட்ஷா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இதற்கிடையே இறந்துபோன அந்த பச்சிளம் குழந்தையின்பிரேத பரிசோதனை முடிவுகள் நேற்று காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. அதில் விஷம் கலக்கப்பட்ட பாலை அந்தகுழந்தை குடித்ததால்தான் குழந்தை இறந்துள்ளது என்று அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அந்த குழந்தையின் பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சாதிக்பாட்ஷா தனியார் பஸ்ஸில் நடந்துனராக பணியாற்றி வந்தவர், தற்போது கரோனா காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் வருமானம் இன்றி குடும்பத்தில் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக குடும்பம் நடத்த முடியாமல் கணவன், மனைவி இருவரும் பரிதவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே ஒரு மகன் ஒரு மகள் இரு பிள்ளைகள் உள்ளதால் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை இந்த வறுமையான நிலையில் எப்படி வளர்த்து ஆளாக்க போகிறோம் என்ற மனநிலையில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் குழந்தையின் தாய் யாஸ்மின், குழந்தையை கொலை செய்ய முடிவு செய்து சம்பவத்தன்று இரவு பாலில் பூச்சி மருந்து கலந்து,குழந்தைக்கு கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக குழந்தையின் தாய் யாஸ்மின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள கரோனா காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமல் பல தரப்பினரும் சிரமத்தில் உள்ள நிலையில் வறுமையின் காரணமாக ஒரு பச்சிளம் குழந்தையை பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பலரையும் கவலை கொள்ள செய்துள்ளது.