ADVERTISEMENT

உறுப்புகளை தானம் வழங்க சம்மதித்த குடும்பத்தினர்: சாதனை புரிந்த மருத்துவர்கள்!

10:20 AM Jul 08, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ஈரோடு அருகே, சாலை விபத்தில் மூளை இறப்பு ஏற்பட்ட அரசுப் போக்குவரத்து ஊழியரிடமிருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகிய உறுப்புகள் 5 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பி.ஆர்.எஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (53). காங்கேயம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றிவந்தார். கடந்த 1ஆம் தேதி, மோட்டார் சைக்கிளில் பெருந்துறைக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அப்போது எதிரில் தாறுமாறாகவந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், பழனிசாமியின் வாகனத்தின்மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமிக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், ஜூலை 2ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 4ஆம் தேதி அவர் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். மூளை இறப்பு ஏற்பட்ட பழனிசாமியின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவருடைய குடும்பத்தினர் முன்வந்தனர். மனைவி ஜெயமணி, மகள்கள் சவுந்தர்யா, சுகுணா ஆகியோர் கணவர்/தந்தை இழந்த துக்கத்தைத் தாளாத நிலையிலும் பிறரின் துயரத்தைப் போக்க உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க சம்மதித்தனர்.

இதையடுத்து ஜூலை 6ஆம் தேதி, பழனிசாமியின் முக்கிய உடல் உறுப்புகள் தானம் வழங்குவதற்கு ஏற்ற வகையில் நல்ல நிலையில் உள்ளதா என 20 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஆய்வுசெய்தனர். இக்குழு, பழனிசாமியின் உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், 2 கண்கள், தோல் ஆகியவற்றைப் பாதுகாப்பாக அகற்ற முடிவு செய்து, அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பழனிசாமியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் பெண் ஒருவருக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கும் பொருத்தப்பட்டது. தோல் மற்றும் 2 கண்களும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சேலம் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி கூறுகையில், “பழனிசாமியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளிக்கு உடனடியாக பொருத்தப்பட்டது. மருத்துவர்கள் குழு பரிசோதனையில் பழனிசாமியின் கல்லீரல், இதயம் ஆகிய முக்கிய உறுப்புகள் தானம் கொடுக்கப்படும் நிலையில் இல்லை. அவை பாதிக்கப்பட்டிருந்தன” என்றார். இதற்கிடையே, பழனிசாமியின் உடல் உறுப்புகள் மூலம் 5 நோயாளிகளின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்பட்டுள்ள தகவலால் அவருடைய மனைவி, மகள்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT