
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ப.எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கு, பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 12ஆம் வகுப்பு படிக்கும் மகள் திவ்யாவும், 10ஆம் வகுப்பு படிக்கும் மகன் திவாகரும் உள்ளனர். இந்நிலையில், பாக்யராஜ் நாள்தோறும் வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு,மது போதையிலேயே இருந்துவந்ததாகவும்,மதுபோதையில்தினந்தோறும் வீட்டுக்குச் செல்வதால் மனைவி மற்றும் குடும்பத்திலுள்ள பிள்ளைகளுடன் சண்டையில் ஈடுபட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (10.09.2021) மாலை 6 மணியளவில் பாக்யராஜுக்கு சொந்தமான முந்திரிக் காட்டில், அவரது மனைவி பாக்கியலட்சுமி மற்றும் அவரது பிள்ளைகளான திவ்யா, திவாகர் ஆகியோர்முந்திரி மரக்கிளையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆலடி காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்த சென்ற காவல்துறையினர், தூக்கில் தொங்கியபடி இருந்த மூவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும்,பாக்யராஜ் தினந்தோறும் அதிக மதுபோதையில் இருப்பதால் குடும்பத்தில்அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாகவும், கடந்த ஒருமாத காலமாக குடிக்க மாட்டேன் என்று கூறியிருந்த பாக்யராஜ், நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் குடிக்கச் சென்றுள்ளார். அதனால் மனவேதனை அடைந்த அவரது மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாமா?
அல்லது பாக்யராஜின் மனைவி பாக்கியலட்சுமி முகத்தில் காயங்கள் அதிக அளவில் உள்ளதால், மதுபோதையில் மனைவி பிள்ளைகளிடம் தகராறு செய்து அடித்ததால் விரக்தியில் தற்கொலைசெய்திருக்கலாமா? போன்ற சந்தேகத்தின் பேரில்கணவரான பாக்கியராஜை கைதுசெய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன் ஆகிய மூவரும் முந்திரிக்காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, பெண்ணாடம் அடுத்த தாழநல்லூரைச் சேர்ந்த மோகன்ராஜ் (32) எனும் கூலித்தொழிலாளி தினந்தோறும் குடித்துவிட்டு தனது குடும்பத்தினரிடம் தகராறு செய்துவந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மனைவி மணிமொழி (23), அவரது குழந்தைகளான மேகாஸ்ரீ (3), அனுஷ்கா (ஒன்றரை வயது) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, வீட்டிலிருந்த எலி பேஸ்ட் மருந்தை எடுத்து தனது இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுள்ளார்.
அதனால் வாந்தியெடுத்த மூவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை மேகாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, குடும்பத்தைக் கவனிக்காமல் குடும்பத்தினரை தினந்தோறும் தொந்தரவுப்படுத்தி வந்த குடும்பத் தலைவர்களின் தொல்லை தாங்க முடியாமல், வேதனையின் விளிம்பிற்கு சென்ற நிலையில், மனைவிமார்கள் பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் மனதை உலுக்குவதாக அமைந்துள்ளது. அன்றாடம் நடந்தேறும் இந்தக் கொடூர நிகழ்வுகளுக்குத் தீர்வுதான் என்ன என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)