Advertisment

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடிப்பு... மனைவி, மகன் பலி... தந்தைக்கு தீவிர சிகிச்சை!

family incident police investigation namakkal district

Advertisment

நாமக்கல் அருகே, கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தனர். இதில், மனைவி, மகன் பலியான நிலையில், தந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் அக்பர் (வயது 60). உள்ளூரில், டிராக்டர்களுக்கான டிரெய்லர் பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்திவந்தார். இவருடைய மனைவி பாத்திமா (வயது 55). இவர்களுடைய மூத்த மகன் பர்கத் (வயது 30). இரண்டாவது மகன் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார்.

இந்த தொழிற்சாலையில் தந்தைக்கு உதவியாக பர்கத்தும் வேலை செய்துவந்தார். கடந்த சில மாதங்களாக தொழிற்சாலை மூலம் சரியான லாபம் கிடைக்கவில்லை. இதனால் திடீரென்று தொழிற்கூடம் மூடப்பட்டது.

Advertisment

இந்நிலையில், அக். 4ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அக்பர், தனது உறவினர்களை செல்ஃபோனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, “நாங்கள் விஷத்தைக் குடித்துவிட்டோம்” என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நள்ளிரவு 12.00 மணியளவில் அக்பரை தேடி அவருடைய வீட்டுக்குச் சென்றனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

அங்கு அக்பர், பாத்திமா, பர்கத் ஆகிய மூன்று பேரும் வாயில் நுரை வழிந்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து மூன்று பேரையும் மீட்டு, பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பாத்திமா, பர்கத் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அக்பர், தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்தி வேலூர் காவல் நிலைய காவல்துறையினர், பாத்திமா, பர்கத் ஆகியோரின் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில், அக்பர் நடத்திவந்த தொழில் மூலம் அவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக நட்டத்தை சந்தித்துவந்ததும், குடும்பத்தை நடத்த பலரிடம் கடன் பெற்றிருந்ததும் தெரியவந்தது. ஒரு கட்டத்தில் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடியதால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் கடன் கொடுத்த சிலர் பணத்தைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் விரக்தி அடைந்த அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, விஷம் குடித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் கிடந்த இடத்தில் காலி குளிர்பான பாட்டிலும், விஷ பாட்டிலும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

namakkal district Police investigation
இதையும் படியுங்கள்
Subscribe