Advertisment

கரோனாவுக்கு முதலில் பலியான போலீஸ் இன்ஸ்பெக்டர் குடும்பம் பரிதவிப்பு!

The family of the first police inspector who fell victim to the corona is devastated!

சென்னையில் தி.நகர் காவல் சரகம் என்பது மிக முக்கியமான மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. கொரோனா காலத்தில் அங்கு மக்கள் கூடுவதை, கூடுமானவரையிலும் தடுப்பதோடு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதிலும் காவல் துறையின் பங்களிப்பு அளப்பரியது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இப்போது வரை, மாம்பலம், பாண்டிபஜார் போலீஸார், தங்களது உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் 17-ந்தேதி மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி, கொரோனா தொற்றால் உயிரிழந்தார். தமிழகத்தில் கரோனாவுக்கு எதிரான களத்தில் பலியான முதல் போலீஸ்காரர் இவர்தான்.

Advertisment

கரோனா தொற்றுக்கு ஆளாகி அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதுதான், ரெம்டெசிவர் என்ற மருந்து ஒரளவுக்கு பலன் அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து, ஐதராபாத்தில் இருந்து அந்த மருந்தை வரவழைத்துக் கொடுத்தார் அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன். எனினும், பலன் கிட்டவில்லை.

Advertisment

கரோனாவுக்கு எதிரான களத்தில் முதல் பலியான போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கவுரவம் அளிக்கும் வகையில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை, அனைத்து காவல் நிலையத்திலும், பாலமுரளி உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாம்பலம் காவல் நிலையத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அன்றைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு சார்பில் பாலமுரளி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்தார். ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்பட்டது. ஆனால், அவரது மனைவிக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை. இப்போது குடியிருக்கும் காவலர் குடியிருப்பையும் காலிபண்ணச் சொல்லிவிட்டதால் கலக்கத்திற்கு ஆளாகி இருக்கிறது, அந்த ஆய்வாளரின் குடும்பம்.

The family of the first police inspector who fell victim to the corona is devastated!

பால முரளியின் மைத்துனர் சந்திரன் “பாலமுரளியின் மனைவிக்கு வேலை வழங்குவது தொடர்பாக, அப்போது தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஷ்வரியிடம் மனு கொடுத்தோம். அவரும் கண்டிப்பாக ஏற்பாடு பண்ணித் தருகிறேன் என உத்திரவாதம் அளித்தார். ஆனால், கொஞ்ச நாளில் அவர் பணி மாறுதலில் சென்றுவிட்டதால், அந்த மனு அப்படியே கிடப்பில் கிடக்கிறது. நாங்களும் எப்படியாவது வேலை கிடைத்துவிடும் என எதிர்பாத்திருந்தோம். இப்போது வீட்டைக் காலிபண்ணச் சொல்லிட்டாங்க. வேலையும் கொடுக்கவில்லை; வீடும் இல்லை என்று சொல்லும்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அரசாங்கம் ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

இன்ஸ்பெக்டர் பாலமுரளியுடன் பணியாற்றிய காவலர் ஒருவர் “போனவருஷம் இதே நேரத்தில் ரொம்பவும் ரிஸ்க் எடுத்து வேலை பார்த்தார் எங்கள் இன்ஸ்பெக்டர். வழக்கமான காவல் பணியோடு கடைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். சந்தைகளில் கூட்டம் சேராமல் பார்க்க வேண்டும். வியாபாரிகள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் ரொம்பவே மெனக்கெட்டார். கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் நடேசன் பார்க் எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில், தற்காலிக சந்தை செயல்பட ஏற்பாடு செய்து கொடுத்தார்.

வியாபாரிகள் மொத்தம் மொத்தமாக காய்கறிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். அங்கேயே ஒரு போலீஸ் பேட்ரோல் வண்டியை நிறுத்தி, வரும் மக்களை சமூக இடைவெளியை பின்பற்றிட ஏற்பாடு செய்தார். ஆனால், சந்தைக்கு வரும் மக்கள் எதையும் காதில் வாங்கவில்லை. நாளுக்கு நாள் திருவிழாக் கூட்டம் போல், மைதானம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரே வாரம்தான் சந்தை நடைபெற்றது. ஆய்வுக்கு வந்த அன்றைய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சந்தையை மூடி சீல் வைத்துவிட்டார்.

பின்னர், வியாபாரிகள் இன்ஸ்பெக்டர் பாலமுரளி முன் வந்து நின்றனர். ‘சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்போம். வாடிக்கையாளர்களும், நாங்களும் முகக் கவசம் அணிவோம். இனிமேல் பிரச்சனை வராமல் பார்த்துக்கிறோம். எங்களது கடையிலேயே வியாபாரம் செய்து கொள்ள அனுமதி கொடுங்கள்’ என்று உத்தரவாதம் அளித்தனர்.

சரி கடையை திறந்து கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கிய ஆய்வாளர், அவரே கடைகளுக்கு முன்பாக வாடிக்கையாளர்களுக்காக ‘வட்டம்’ வரைந்து கொடுத்து களப்பணி ஆற்றினார். அதனால்தான், கரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்தார்”என்று நினைவுகளை அசைபோட்டார்.

கடந்த மே 20-ம் தேதி நிலவரப்படி, கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கைமூன்றாயிரத்தை தாண்டும். இதில் இறந்த போலீஸ்காரர்களின் எண்ணிக்கை 84. இவர்களில் 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிவிட்டோம். எஞ்சியவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆனால், பாலமுரளி இறந்து வரும் 17-ம் தேதியுடன் ஓராண்டாகிறது. ஆனால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, கருணை அடிப்படையில் இன்னும் வேலை வழங்கவில்லை. குடியிருந்த வீட்டையும் காலி செய்ய சொல்லிவிட்டதால், 2 பிள்ளைகளுடன் கையறு நிலையில் தவிக்கிறார் பாலமுரளியின் மனைவி.

police corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe