/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Ulundurpet_3.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பள்ளியன் தாங்கல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சுரேஷ்குமார். இவருக்கும் காட்டு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் மகள் கவிதாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இரு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆனதிலிருந்து கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கவிதா காட்டு நெமிலியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவிதாவின் அண்ணன் முருகவேல் பள்ளியன் தாங்கல் கிராமத்திற்குச் சென்று கவிதாவின் கணவர் சுரேஷ்குமாரிடம் ஏன் இப்படி அடிக்கடி எனது தங்கையை குடும்பம் நடத்தவிடாமல் பிரச்சனை செய்து வருகிறாய் என கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட தகராறை தடுக்க வந்தார் சுரேஷ்குமாரின் தந்தை பழனிவேல். அவரை அசிங்கமாக திட்டி முருகவேல் கோபத்தில் நெட்டி தள்ளினார். இதில் கீழே விழுந்த பழனிவேலின் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு இறந்து கிடந்த பழனிவேலு சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து எடைக்கல் காவல் நிலையத்தில் பழனிவேல் மகன் சுரேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முருகவேலை கண்டி யாங்குப்பம் ரயில்வே கேட் அருகில் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சண்டையை விலக்கச் சென்றவர் கொலையான சம்பவம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)