Family asset issue elder brother passed away

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ள செம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி(47). இவரது சகோதரர் சந்திரசேகர்(44). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப சொத்து பங்கு பிரித்துக் கொள்வது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இவர்களுக்கு கொஞ்சம் காலி இடமும் உள்ளது. அதில் அதிகப்படியான தேக்கு மரம் வளர்ந்துள்ளன. சம்பந்தப்பட்ட அந்த நிலத்தில் வளர்ந்திருந்த தேக்கு மரங்களை சந்திரசேகர், சக்கரவர்த்தி அனுமதி இல்லாமல் இரண்டு மாதத்திற்கு முன்பு சில மரங்களை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டார். அதில் மீதி இருந்த தேக்கு மரத்தை சக்கரவர்த்தி நேற்று முன்தினம் அவர் தனது பங்குக்கு வெட்டி உள்ளார்.

Advertisment

இதைக் கேள்விப்பட்ட சந்திரசேகர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து சக்கரவர்த்தி வீட்டுக்குச் சென்று அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கைகலப்பாக மாறி உருட்டுக்கட்டை, கம்பு போன்றவற்றால் சக்கரவர்த்தியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படு காயமடைந்த சக்கரவர்த்தியை அங்கிருந்த உறவினர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரவர்த்தி நேற்று உயிரிழந்துள்ளார்.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தியின் உறவினர்கள் மணலூர்பேட்டை காவல் நிலையம் முன்பு சக்கரவர்த்தியை அடித்துக்கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரியும் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருக்கோவிலூர் டி.எஸ்.பி பழனி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

சக்கரவர்த்தி மனைவி பச்சையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்கரவர்த்தி கொலைக்கு காரணமாக சந்திரசேகர், சஞ்சய், சஞ்சய் மனைவி ஜெயந்தி, செல்லம்மாள், சந்திரசேகர் மனைவி இந்திரா, முனியப்பன் மனைவி ரேவதி, ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட சந்திரசேகர், ஆட்டுக்காரன், சஞ்சய், செல்லம்மாள் ஆகிய நால்வரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். மற்ற மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.