False accusation against husband; Mother struggle with 6 children!

Advertisment

சேலத்தில், கணவன் மீது காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்துவிட்டதாகவும், சிறையில் உள்ள அவரை ஜாமினில் விடுவிக்கக் கோரியும், 6 குழந்தைகளுடன் தாயார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மணியனூரைச் சேர்ந்தவர் கோபால். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவரை, கஞ்சா வழக்கில் காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும். தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டுச் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமை (ஜன. 31) காலையில், இளம்பெண் ஒருவர், 6 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் கோரிக்கை மனுவுடன் வந்தார். திடீரென்று அவர், தான் மறைத்து வைத்திருந்த ஒரு பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை தன் உடலின் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்து, மண்ணெண்ணெய் பாட்டிலைப் பிடுங்கி வீசியெறிந்தனர்.

Advertisment

மரகதத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், ''என் பெயர் மரகதம் (29). என்னுடைய கணவர் கோபால். சேலம் மணியனூரில் வசிக்கிறோம். எங்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். என் கணவர் மீது காவல்துறையினர் கஞ்சா விற்றதாக பொய் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அவரைக் கடந்த ஐம்பது நாட்களாக சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவரை ஜாமினில் விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தும் இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை. நான் பூ வியாபாரம் செய்து வருகிறேன். என்னுடைய கணவர் சிறையில் உள்ளதால் போதுமான வருமானம் இல்லாததால் குழந்தைகளை வளர்க்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். எனவே, என் கணவருக்கு விரைவில் ஜாமின் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து, தொடர் விசாரணைக்காக அவரை அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்கு செல்லும்படி அனுப்பி வைத்தனர். ஆறு குழந்தைகளுடன் தாயார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.