Skip to main content

“போலி தடுப்பூசி பதிவுகள்: சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயித்து அழுத்தம் தரக் கூடாது!” - ராமதாஸ் 

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

"Fake Vaccine Records: Do Not Press Out on Impossible Goals!" - Ramadoss

 

கரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பெரும் உதவியாக இருக்கின்றன. இந்நிலையில், பலருக்கும் தடுப்பூசி செலுத்தாமலேயே அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக குறுஞ்செய்திகள் வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இதனைக் கண்டறிந்து தவறுகளைக் களைய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கும், பல மாதங்களுக்கு முன்பே உயிரிழந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக போலியாக பதிவுகள் செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய போலி பதிவுகள் இனி நடக்காமல் தடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளபோதிலும், இதுவரை செய்யப்பட்டுள்ள போலி பதிவுகள் நீக்கப்பட வேண்டியதும், போலி பதிவுகளின் எண்ணிக்கை கண்டறியப்பட வேண்டியதும் அவசியமாகும்.

 

கரோனா தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமிதம் அளிக்கும் ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில், தடுப்பூசி போட்டதாக போலி பதிவுகள் செய்யப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்திருப்பது பெரும் ஏமாற்றமும், கவலையும் அளிக்கிறது. போலி பதிவுகள் செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மூன்றாவது தரப்பின் குற்றச்சாட்டு அல்ல. மாறாக, இந்த முறைகேடுகளை அரசு பொது சுகாதாரத்துறையே கண்டறிந்து உறுதி செய்திருக்கிறது.

 

சென்னையில் பல மாதங்களுக்கு முன்பே உயிரிழந்த மூத்த குடிமகன் ஒருவர் பயன்படுத்திய செல்பேசிக்கு அக்டோபர் மாதத்தில் இரு குறுஞ்செய்திகள் வந்துள்ளன. அதில், அந்த செல்பேசியைப் பயன்படுத்திவரும் இருவருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்பே தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவரின் செல்பேசி எண்ணைப் பயன்படுத்தி மூவருக்குத் தடுப்பூசி போடப்பட்டதாக போலி பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக பதிவு செய்துள்ள பலருக்குத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

 

கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பொது சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு சாத்தியமில்லாத இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதை எட்ட முடியாது என்பதால்தான் சுகாதாரப் பணியாளர்கள் போலி பதிவுகளை செய்தார்கள் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வந்துள்ளன. போலி பதிவுகளுக்கான காரணங்களையும், பின்னணியையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானவையாக இருக்கும்; பல நேரங்களில் அந்த பாதிப்பை சரி செய்ய முடியாது. இதை உணராமல் சுகாதாரத்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் செயல்படக் கூடாது.

 

உயிரிழந்தவர்களின் செல்பேசி எண்ணை பயன்படுத்தி போலி பதிவுகள் செய்யப்பட்டிருந்தால் அது குற்றம் தான் என்றாலும், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. அதே நேரத்தில், ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் செல்பேசி எண்ணை பயன்படுத்தி போலி பதிவுகள் செய்யப்பட்டிருந்தால், கடைசியாக அந்த எண்ணை பயன்படுத்தி யாருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அதற்கான தடுப்பூசி சான்றிதழை மட்டும் தான் பதிவிறக்கம் செய்ய முடியும். அதனால், உண்மையாகவே அந்த செல்பேசி எண்ணை வைத்திருப்பவர் அவருக்கான தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்க முடியாது.

 

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளவர்களின் செல்பேசி எண்ணை பயன்படுத்தியும் போலி பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் போட்டுக்கொண்டதாக பதிவு செய்யப்பட்டால், அவரால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது. இது மிகவும் கொடுமையானது. ஒருவர் செய்யாத தவறுக்காக அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்பை பறிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

 

தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட வேண்டும் என்ற அரசின் நோக்கம் சரியானது தான். ஆனால், அதற்காக சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து களப் பணியாளர்களுக்கு தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துவது சரியல்ல. அதுமட்டுமின்றி, இலக்கை எட்டாத சுகாதாரப் பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளும் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. அதனால்தான் சுகாதாரப் பணியாளர்கள் இத்தகைய குறுக்கு வழிகளை பின்பற்றியதாக கூறப்படுகிறது.

 

தடுப்பூசி போடுவதற்கு சாத்தியமற்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது எவ்வளவு தவறோ, அதை விட தவறு அதைக் காரணம் காட்டி போலி பதிவுகள் செய்யப்பட்டது ஆகும். கரோனா தடுப்பு தொடர்பான முக்கியமான விஷயத்தில் இது போன்ற குற்றங்களை அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 

தமிழ்நாட்டில் போலி தடுப்பூசிகள் போடப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தெந்த செல்பேசி எண்களை பயன்படுத்தி போலி பதிவுகள் செய்யப்பட்டனவோ, அவை அனைத்தையும் நீக்கி யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து விரிவான வெள்ளை அறிக்கையையும் தமிழக மருத்துவத்துறை வெளியிட வேண்டும். வருங்காலத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயிப்பதை அரசு கைவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.