Skip to main content

அதிகாரி போல் போலி கையெழுத்து! மாயமான 90 லட்சம்!  

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

Fake signature like officer

 

கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தின் செயல் அலுவலராக தற்போது பணியில் உள்ளவர் அருள்குமார். இவர், புவனகிரி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அதே அலுவலகத்தில் ஏற்கனவே செயல் அலுவலராக பணிபுரிந்த சாதிக்பாட்சா என்பவரின் கையெழுத்தை வீரமணி என்பவர் போலியாகப் போட்டுத் திட்டப் பணிகளுக்காக செலவிடப்பட்டதாக மொத்தம் 90 லட்சம் மோசடி செய்துள்ளார். 


இவர் மொத்தம் இரண்டு காசோலை மூலம் இந்தத் தொகையை மோசடி செய்துள்ளார். அதன்படி முதலில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 800 ரூபாயும், இரண்டாவது முறையாக 88 லட்சத்து 97 ஆயிரத்து 600 ரூபாயும் முறைகேடாக வீரமணி எடுத்துள்ளார். மொத்தம் 90 லட்சத்து 93 ஆயிரத்து 400 ரூபாய் கையாடல் செய்துள்ளார். இதற்காக போலி ஆவணங்களை அவர் தயார் செய்து அலுவலக கோப்பில் வைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அவரது புகாரின்பேரில் புவனகிரி போலீசார் அதே அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வரும் வீரமணி மீது மோசடி உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


இதுகுறித்து போலீசார் வீரமணியிடம் நடத்திய விசாரணையில், புவனகிரி அருகில் உள்ள கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த 29 வயது வீரமணி, கம்ப்யூட்டர் பட்டப்படிப்பு படித்துள்ளார். அதனடிப்படையில் இவர் தினக்கூலி அடிப்படையில் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.


இதன் மூலம், அதிகாரிகள் திட்டப் பணிகளுக்கான பணத்தை கம்ப்யூட்டர் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதை நன்கு தெரிந்து வைத்துள்ளார். அதனடிப்படையில் முன்னாள் செயல் அலுவலர் சாதிக் பாட்சா போன்று வீரமணி போலி கையெழுத்திட்டு சுமார் 90 லட்சம் ரூபாய் மோசடியாக பணம் கையாடல் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்