சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது மனைவியுடன் வாழப்பாடி வழியாக பொன்னாரம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புதுப்பாளையம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு இளைஞர்கந்தசாமியின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த நபர் தன்னை காவலர் என்று கூறியபடியே வாகனத்தை சோதனை செய்துள்ளார். பின்னர் கந்தசாமியிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு அவரை அனுப்பி வைத்துள்ளார்.
காவல்துறை சீருடை அணிந்திருந்தாலும்அந்த நபரின் செய்கைகள் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததால் இது குறித்து கந்தசாமிவாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் உமாசங்கர் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அந்த நபர்கடம்பூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (35) என்பதும், வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டும், தன்னை காவலர் என்று கூறி பல வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த காவல்துறை சீருடையையும் பறிமுதல் செய்தனர்.