Fake police who stole the professor's house in a new way in ranipet

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி பிரியா (40). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ( 08.02.2025) இவரது வீட்டிற்கு வந்த ஆறு பேர் ‘நாங்கள் போலீஸ் உங்கள் வீட்டை சோதனையிட வந்துள்ளோம்’ என கூறி போலியான அடையாள அட்டையை காண்பித்துள்ளனர்.

Advertisment

இதனையடுத்து தனது வீட்டில் உள்ள 17 சவரன் நகை, பணம் லேப்டாப் உள்ளிட்டவற்றை பேராசிரியர் காண்பித்த போது அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். சிலமணி நேரத்துக்கு பின்பே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுதொடர்பாக ஆற்காடு நகர காவல் நிலையத்தில் 09.02.2025 அன்று புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆற்காடு நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இதற்கிடையில், செய்யாறு சாலை சந்திப்பில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (41) என்பவரை பிடித்து விசாரித்த போது இவரோடு சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பேராசிரியர் வீட்டில் போலீஸ் என கூறி நூதன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து ராஜசேகர் (41), காதர் (20), ஜெகன் (20), விக்னேஷ் (27), கார்த்திகேயன் (25), பிரகாஷ் (29) ஆகிய ஆறு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 17 சவரன் தங்க நகைகள், செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.