Skip to main content

புல்லட்டில் கஞ்சா விற்பனை.. சைட் பிசினஸ் 'கார் திருட்டு'! - பலே வாலிபருக்கு 'காப்பு'!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

Fake police involved in theft - Police arrested

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் கோடியூர் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் கோடியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஜோலார்பேட்டை நகரப்பகுதி ஒரு இடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் ஆம்பூர் ஏ கஸ்பா ரேணுகாம்பாள் தெருவைச் சேர்ந்த 25 வயதான ஜெகன்குமார் என்றும், எம்.பி.ஏ பட்டபடிப்பு முடித்தும் வேலை கிடைக்காமல் இருந்ததாகவும் தெரியவந்தது.

 

மேலும், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கூலித் தொழிலாளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். காவல்துறையினர் பிடியிலிருந்து தப்பிக்க, தான் வைத்திருக்கும் புல்லட்டில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியும், போலீஸ் என்று போலி அடையாள அட்டை வைத்துக்கொண்டும் சுமார் ஒரு வருட காலமாக வலம் வந்துள்ளார். அதேபோல் வீட்டில் மொத்தமாக கஞ்சா வைத்திருந்து தேவைப்படும்போது எடுத்துவந்து விற்பனை செய்ததாகவும் கூறியுள்ளார்.

 

Fake police involved in theft - Police arrested

 

இதனைத் தொடர்ந்து  போலீஸார் ஜெகன்குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது  இரண்டு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தலுக்காக, கடந்த மாதம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ரவிகுமார் என்பவருக்குச் சொந்தமான 2 கார்களை திருடிச் சென்று, திருப்பத்தூர் நகரில் தனக்குத் தெரிந்த நண்பரின் இடத்தில் பதுக்கி வைத்துள்ளார். பின்னர், காவல்துறையினர் அந்த இடத்தில் இருந்த 6.50 லட்சம் மதிப்பிலான இரண்டு கார்களையும் பறிமுதல் செய்த போலீசார், 'சட்டவிரோத கஞ்சா விற்பனை', 'கார் திருட்டு' ஆகிய வழக்குகளின் கீழ் ஜெகன்குமார் மீது வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்