Skip to main content

போலி ஹால்மார்க் குறியீடு; 10 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்; பி.ஐ.எஸ் அதிகாரிகள் அதிரடி!

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Fake Hallmark code; 10 kg of silver clasps seized! BIS officers in action!

 

திருச்செங்கோட்டில் போலியாக ஹால்மார்க் குறியீடு இட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 10 கிலோ வெள்ளிக் கொலுசுகளை பி.ஐ.எஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

பி.ஐ.எஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய அமைவன நிறுவனத்தின் கோவை கிளை அலுவலகத்தின் முதுநிலை இயக்குநர் கோபிநாத் தலைமையில் அலுவலர்கள் குழுவினர், போலி பி.ஐ.எஸ் முத்திரையிடப்பட்ட பொருட்கள் விற்பனை மற்றும் போலி ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பி.ஐ.எஸ் நிறுவன இணை இயக்குநர் ஜீவானந்தம், உதவி இயக்குநர் கவின் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள், கடந்த சில நாள்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். 

 

திருச்செங்கோடு தேரடி வீதியில் பி.ஐ.எஸ் உரிமம் பெறாமல் ஒரு தனியார் நிறுவனம் தங்கம், வெள்ளி நகைகளுக்கு போலியாக ஹால்மார்க் தரக்குறியீடு பதிவிட்டு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது, போலி ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 9.70 கிலோ வெள்ளிக் கொலுசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கொலுசுகளை கோவை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

 

இது தொடர்பாக பி.ஐ.எஸ் அலுவலர்கள் கூறுகையில், ''பி.ஐ.எஸ் உரிமம் இல்லாமல் அசேயிங் மற்றும் ஹால்மார்க் மையங்களில் நகைகளை ஹால்மார்க் குறியீடு பதிவு செய்யக்கூடாது. விதிகளை மீறி போலி ஹால்மார்க் குறியீடு செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செங்கோட்டில் பி.ஐ.எஸ் உரிமமின்றி செயல்பட்ட மையத்தில் இருந்து போலி தரக்குறியீடு செய்யப்பட்டு இருந்த சுமார் 10 கிலோ வெள்ளி கொலுசுகளை பறிமுதல் செய்துள்ளோம். இதுபோன்ற திடீர் சோதனைகள் இனி அடிக்கடி நடத்தப்படும்'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

நகைகள் கொள்ளைச் சம்பவம்; நூதன முறையில் வலம் வந்த கொள்ளையன் கைது

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
coimbatore Jewelery issue police action

கோவை மாவட்டம் காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி ஏசி வென்டிலேட்டர் வழியே துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர், சுமார் 200 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணைக் காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்டமாக அந்தக் கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளைத் திருடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் மீது தருமபுரி மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீசார் இவரைத் தேடி வருவதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் ஆனைமலைக்கு விரைந்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரது வீட்டிலும், அவரது நண்பர் சுரேஷ் என்பவர் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த கொள்ளையன் விஜயகுமார் வீட்டில் இருந்தும், ஆனைமலையில் உள்ள அவரது நண்பர் சுரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி இருந்தனர்.

இந்நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான விஜயகுமாரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் ஐயப்ப பக்தர் போல் வேடம் அணிந்து வலம் வந்த நிலையில், போலீசார் இவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் போலீசாரால் கைது செய்யப்பட்ட விஜயகுமார் விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.