Advertisment

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி இயக்குநர்

Fake film director arrested in salem

சேலத்தில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி பல இளம்பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய போலி இயக்குநரையும், அவருடைய பெண் உதவியாளரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விரைவில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Advertisment

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள வீரப்பன்பாளையத்தைச் சேர்ந்தவர் வேல் சத்ரியன் (38). இவர் தன்னை சினிமா இயக்குநர் என்றும், தான் புதிதாக இயக்கும் படத்திற்கு நடிகைகள் தேவை என்றும் விளம்பரம் செய்திருந்தார். இவருடைய அலுவலகம் சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா அருகே ஒரு கட்டடத்தில் இயங்கி வந்தது. இவருடைய அலுவலகத்தில் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த செல்வி (32, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், மூன்று நாள்களுக்கு முன்பு சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

Advertisment

அந்த புகாரில், வேல்சத்ரியனும், அவருடைய உதவியாளரான ராஜபாளையத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும், தன்னுடைய செல்போனை பறித்துக்கொண்டு மிரட்டுவதாகவும், பல இளம் பெண்களை வைத்து சினிமா படம் எடுக்கிறேன் என்ற பெயரில் ஆபாசப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் காவலர்கள் சம்பந்தப்பட்ட வேல்சத்ரியனின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அவர் இளம்பெண்களை வைத்து ஆபாசப்படங்களை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வேல்சத்ரியன், உதவியாளர் இளம்பெண் ஆகிய இருவரையும் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

வேல்சத்ரியன் தற்போது 'நோ' என்ற பெயரில் புதிதாக படம் இயக்குவதாகவும், அதற்கு புதுமுக நடிகைகள் தேவை என்றும் விளம்பரம் செய்துள்ளார். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் இளம் பெண்களை தனது அலுவலகத்தில் வைத்து பல்வேறு கோணங்களில் ஆபாசமாக படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். சிலரை, வீடியோ எடுத்து, தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

சேலம் மட்டுமின்றி, சென்னை, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் கூட இவரால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவருடைய அலுவலகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள், மடிக்கணினி, பென் டிரைவ், கேமரா உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹார்டு டிஸ்க்குகளில் 300க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தற்போது புகார் கொடுக்க முன்வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு 150 ஆண்கள், 250 பெண்கள் என மொத்தம் 400 பேர் தங்களது புகைப்படங்கள், தனிப்பட்ட விவரங்களை கொடுத்துள்ளனர். படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த பலரிடம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துவிட்டு, அவர்களுக்கு நடிக்க வாய்ப்பும் தராமல், பணத்தையும் திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் செப். 4ம் தேதி ஒரு புகார் பெற்றுள்ளது காவல்துறை. ஹார்டு டிஸ்க்குகளில் மேலும் பல பெண்களின் ஆபாசப்படங்களை அழித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அவற்றை மீண்டும் பெற முடியுமா? என்றும் சைபர் கிரைம் காவல்துறையுடன் ஆலோசித்து வருகின்றனர்.

வேல்சத்ரியன் மீதும் மேலும் புகார்கள் அடுத்தடுத்து பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்சத்ரியனையும், அவரின் உதவியாளரையும் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

police Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe