30 ஆண்டாக பாடம் சொல்லித்தந்த போலி ஆசிரியர்! திடீர் தலைமறைவு... அதிரடி சஸ்பெண்ட்!

Fake female teacher who taught for 30 years! in dharmapuri

தர்மபுரி அருகே, போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த அரசுப்பள்ளி பெண் தலைமை ஆசிரியர் ஒருவர், 30 ஆண்டுகளுக்குப் பின் குட்டு வெளிப்பட்டதை அடுத்து, அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள திம்மராயன அள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. வள்ளியம்மாள் (50) என்பவர், இப்பள்ளிதலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 1988ம் ஆண்டு பிளஸ்2 முடித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து, ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது, வள்ளியம்மாள் பணியில் சேரும்போது சமர்ப்பித்த சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா உத்தரவின்பேரில் காரிமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர் உமாதேவி, தலைமை ஆசிரியர் வள்ளியம்மாள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி மகேந்திரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த வள்ளியம்மாள் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடிவருகின்றனர்.

இதற்கிடையே, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக தலைமை ஆசிரியர் வள்ளியம்மாளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பெண் தலைமை ஆசிரியர் ஒருவரே, போலி சான்றிதழ் மூலம் 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சம்பவம் தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

dharmapuri
இதையும் படியுங்கள்
Subscribe