Skip to main content

அரசு நிலத்தை அபகரிக்க போலி பத்திரப்பதிவு; கோடிக்கணக்கில் கனிமவளங்கள் கொள்ளை! 

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

Fake deed of government land; Loot Minerals!

 

தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை நடத்தினார். அதில், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக் குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. 

 

இந்த நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பெரியகுளம் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் தனிநபர் சிலர் அபகரித்து தங்களின் பெயரில் பட்டா பெற்றனர். இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாக மாற்றப்பட்டன. மேலும், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்த புகார்களின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய ஆனந்தி, ஜெயப்பிரிதா மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், நில அளவையர்கள் மற்றும் தனிநபர்கள் என மொத்தம் 14 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ஆனந்தி தற்போது பழனி ஆர்.டி.ஓ.வாகவும், ஜெயப்பிரிதா திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட அளவில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

அதிகாரிகள் துணையுடன் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு கால கட்டத்தில் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலத்தில் கனிமவள கொள்ளையும் நடந்துள்ளது. இதனால், இந்த கால கட்டத்தில் தேனி மாவட்டத்தில் வருவாய்த்துறை, கனிமவளத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றிய அதிகாரிகள், அலுவலர்கள் குறித்த பட்டியலை ரகசிய அறிக்கையாக அளிக்க தலைமைச் செயலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு கடிதம் வந்தது. அதன் பேரில் கலெக்டர், விசாரணை நடத்தி ரகசிய அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் அபகரிக்கப்பட்ட நிலத்தில் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட கனிமவளங்களின் அரசு மதிப்பு சுமார் ரூ.4 கோடியே 13 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், வெளிச்சந்தையில் இந்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

 

இது தொடர்பாக அபராதம் விதிக்க பெரியகுளம் சப்-கலெக்டருக்கு, விரிவான அறிக்கையை கனிமவளத் துறையினர் சமர்ப்பித்துள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட கனிம வளத்தின் மதிப்பில் இருந்து ஒரு மடங்கில் இருந்து 15 மடங்கு வரை அபராத தொகையாக விதிக்கலாம் என்றும், எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவை சப்-கலெக்டர் தான் எடுப்பார் என்றும் கனிமவளத் துறையினர் தெரிவித்தனர்.

 

இதற்கிடையே தற்போது கனிமவளத் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ள இடத்தில் தான் கடந்த 2015-ம் ஆண்டிலும் கனிமவள கொள்ளை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது சுமார் ரூ.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு அபராதம் விதிக்கப்பட்டபோது, அது அரசு புறம்போக்கு நிலமாகவே இருந்ததும், அதற்கு பிறகே அந்த நிலம் அபகரிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.