Skip to main content

செல்ஃபோனில் எடுத்த புகைப்படங்களை காண்பித்த போலி கமிஷ்னர்... அதிர்ந்துபோன காவல்துறை உயரதிகாரிகள்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

The fake commissioner who showed the photos taken on his cell phone ... the police chiefs who were shocked

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே போலி போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் என்று சொல்லிக்கொண்டு, போலீஸ் வாகனம் போல் சைரன் வைத்த ஜீப்பில் சந்தேகத்துக்கிடமான நபர் வருவதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகே காத்திருந்த போலீசார், அவ்வழியே வந்த போலீஸ் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். ஜீப்பிலிருந்து இறங்கியவர், அசிஸ்டன்ட் கமிஷனர் எனக்கூறி தன்னை மடக்கிய போலீசாரை மிரட்டியுள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லியுள்ளார்.

 

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்ற நபர், போலியாக அடையாள அட்டை தயாரித்து, தன்னை போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் எனக் கூறிக்கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றிருப்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், விஜயன் சென்னையில் மூன்றாண்டுகளாக பிரபல கட்சி நடத்தும் சேனலில் பணியாற்றியுள்ளார். அப்போது ஏற்பட்ட போலீஸ் அதிகாரிகளின் பழக்கம் மற்றும் பல விஐபிகளின் பழக்கம் விஜயனை திசைமாற்றியுள்ளது. போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதன் விளைவாக நடை, உடை, பாவனை என அனைத்தையும் மாற்றிக்கொண்டு அசிஸ்டன்ட்  கமிஷனர் அவதாரம் எடுத்துள்ளார் விஜயன். இதில் எதிர்பார்த்த அளவைவிட மரியாதையும், செல்வமும், செல்வாக்கும் கிடைத்ததால் தனது பயணத்தை இந்தியா முழுவதும் தொடர்ந்துள்ளார். ஒவ்வொரு இடத்திலும் கியூ பிரான்ச் இன்டலிஜன்ட் போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்டு அனைத்து இடங்களுக்கும் சென்றுவந்துள்ளார்.

 

The fake commissioner who showed the photos taken on his cell phone ... the police chiefs who were shocked

 

அதேபோல் கேரளா கட்டப்பனைக்குச் சென்றவர், க்யூ பிரான்ச் விசாரணைக்கு வந்திருப்பதாகக் கூறி, இரண்டு நாட்கள் தங்கி, இரண்டு போலீஸார் பாதுகாப்புடன் பல்வேறு கோவில்களுக்குச் சென்றுவந்துள்ளார். “மற்ற மாநிலங்களுக்கு எப்படி  போன”  என கேட்ட போலீசாரிடம், “இலங்கைக்கே சென்று வந்துவிட்டேனே” என அதிர  வைத்துள்ளார். விசாரணை எல்லையின் உச்சகட்டமாக, தன்னை மடக்கிப் பிடித்த போலீஸிடம் தன் செல்ஃபோனில் இருந்த ஐந்து படங்களைக் காட்டியுள்ளார். அதில் ஐந்து மாநில முதல்வர்கள், ஒரு ஆளுநர் உட்பட பலருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போலீஸாரைத் தூக்கிவாரிப் போட்டது. கில்லாடியாக இருப்பாரோ என்ற கோணத்தில் இரண்டு துணை சூப்பிரண்டுகள், 5 டி.ஸ்.பி.கள் என போலீஸ் பட்டாளமே குவிந்து அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால் அவரோ தான் எந்தத் தவறும் செய்யவில்லை. அசிஸ்டன்ட் கமிஷனர் உடையும், பதவியும், காரும் தனக்குப் பிடித்திருந்தது. அதனால் ராஜ மரியாதையுடன் வலம் வந்ததாக கூறியுள்ளார்.

 

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவன பெண் வாங்கி கொடுத்த ஜீப்பினை ரூபாய் 2 லட்சம் செலவில் போலீஸ் வாகனம் போல் ஜோடித்துள்ளார். சைரன் முதல் வாக்கி டாக்கி வரை அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இவர் போட்ட கெட்டப், சீரியஸ் போலீஸா இல்லை சிரிப்பு போலீஸா என விடை தெரியாமல் விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். ‘கஸ்டடி எடுத்திருந்தால் கக்கியிருப்பார், சீக்கிரம் முடித்துவிடுங்கள்’ என மேலிடம் கொடுத்த உத்தரவால், அவர் கையில் வைத்திருந்த இரண்டு டம்மி துப்பாக்கிகள் மற்றும் போலி போலீஸ் ஜீப்பை பறிமுதல் செய்து, வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி-ஐந்து ஒன்றியமாக பிரிக்கப்பட்ட தொகுதி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
End of DMK party tussle- Constituency divided into five unions

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை எதிர்க்கட்சியான அதிமுக கைப்பற்றியதில் மூன்றாவது முறையாக தேன்மொழி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அப்படி இருந்தும் கூட ஆளுங்கட்சியான அந்தப்பகுதி திமுகவினர் இத்தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்வம் கட்டாமல் தங்களுக்குள் கோஷ்டி பூசலை உருவாக்கிக் கொண்டு கட்சியை வளர்க்கவும் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே அறிவாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்த நிலக்கோட்டை தொகுதியில் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை என இரண்டு யூனியன்கள் உள்ள. இந்த யூனியன்களுக்குட்பட்ட பகுதிகளை 5 ஒன்றியங்களாக பிரித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வத்தலக்குண்டு ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு வத்தலக்குண்டு வடக்கு, வத்தலக்குண்டு தெற்கு என புதிய ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 3 பேரூராட்சிகள், 8 ஊராட்சிகள் அடங்கிய வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக கே.பி. முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 9 ஊராட்சிகள் அடங்கிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெற்கு ஒன்றியத்திற்கு கனிக்குமார் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

End of DMK party tussle- Constituency divided into five unions

இதேபோல் நிலக்கோட்டை யூனியனை மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில் நிலக்கோட்டை பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை அடங்கிய பகுதிக்கு மணிகண்டன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் 7 ஊராட்சி ஒன்றியங்களாக சுருக்கப்பட்டு ஒன்றிய பொறுப்பாளராக சௌந்தரபாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய செயலாளர் பதவி கேட்டு நீண்ட நாள் போராடி வந்த கரிகால பாண்டியனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கு ஒன்றியம் என ஒரு கட்டமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது.

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மற்றும் 7 ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளுக்கு கரிகால பாண்டியன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை தொகுதியில் திமுக அதிக அளவில் வாக்குகளை பெற்றுத் தர வேண்டும். பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் திமுக கொடி பறக்க வேண்டும் என்பது கட்சித் தலைமையின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காகவே கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக ஒன்றியங்களை பிரித்து புது வியூகத்தை உருவாக்கி தேர்தல் களத்தை சந்திக்க ஆளும் கட்சியான திமுக தயாராகி வருகிறது.

Next Story

போலீஸ்காரர் போல் நடித்து 50 லட்சம் பறிப்பு; ஐவருக்கு வலை

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

6 arrested for pretending to be policemen and extorting Rs 50 lakh from a trader; And net for five

 

சேலம் அருகே, காவல்துறை அதிகாரி என்று கூறி வியாபாரியிடம் 50 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

 

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (37). இவர், செங்காந்தள் மலர் விதைகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். சில நாள்களுக்கு முன்பு இவரிடம் பேசிய மர்ம நபர்கள், பழைய ரூபாய் தாள்களுக்கு 10 சதவீத கமிஷனுடன் புதிய பணத்தாள்கள் வழங்கப்படும் என்றும், சேலத்தில் அதற்கான வாடிக்கையாளர் இருக்கிறார் என்று கூறியும் அழைத்துள்ளனர்.

 

இதைய நம்பிய வெங்கடேஷ், வியாபாரத்திற்கு வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை ஒரு பெட்டியில் எடுத்துக்கொண்டு சேலத்திற்கு வந்தார். சேலத்தில் அவரை வரவேற்ற மர்ம நபர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, மாரமங்கலத்துப்பட்டியில் உள்ள ராஜேஷ் என்பவர்தான் வாடிக்கையாளர் எனக்கூறி காரில் அழைத்துச் சென்றனர்.

 

தொலைவில் இருந்தே ராஜேஷின் வீட்டைக் காட்டி, அவரிடம் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது ராஜேஷ், தான் ஒரு வேலையாக இருப்பதால், தன்னுடைய ஊழியர் ஒருவரை அனுப்பி வைக்கிறேன். அவரிடம் புதிய ரூபாய் தாள்களும், கமிஷன் தொகையும் அனுப்பி வைக்கிறேன். அவரிடம் பழைய ரூபாய் தாள்களை கொடுத்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

 

இரும்பாலை பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் வந்து, வெங்கடேஷின் காரை வழிமறித்தனர். அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர் காக்கி சீருடையில் இருந்தார். தன்னை காவல்துறை அதிகாரி என்று கூறிய அவர், காரில் கருப்புப்பணம் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் வந்ததாகக் கூறினார்.

 

மேலும், வெங்கடேஷ் கொண்டு வந்த 50 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு, தாரமங்கலம் காவல்நிலையத்தில் ஆஜராகிவிட்டு, பணத்தை பெற்றுச் செல்லும்படி கூறினார். அதன்படி, வெங்கடேஷ் தாரமங்கலம் காவல்நிலையத்திற்குச் சென்று விசாரித்தபோது தன்னிடம் பணம் பறித்துச்சென்ற கும்பல் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

 

இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின்பேரில் இரும்பாலை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், வெங்கடேஷிடம் பழைய ரூபாய் தாள்களை புதிய பணமாக மாற்றித் தருவதாகச் சொன்ன கும்பல்தான் காவல்துறை அதிகாரிகள் போல வேடமிட்டு ஆள்களை வைத்து பணம் பறித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் நடந்தபோது, வெங்கடேஷூடன் ஒரே காரில் எதுவுமே தெரியாதது போல அமர்ந்து இருந்துள்ளனர்.

 

இந்த வழக்கு தொடர்பாக தாராபுரம் காலிபாளையத்தைச் சேர்ந்த மோகன்பாரதி (26), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த வினித்குமார் (27), அருப்புக்கோட்டை சின்னசெட்டிப்பட்டியைச் சேர்ந்த முத்துமணி (30), காங்கேயம் சின்னாயிபுதூரைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் (24), சிவகாசி திருத்தங்கல் சாலையைச் சேர்ந்த கணேசன் (58), ஒட்டன் சத்திரம் கே.கீரையானூரைச் சேர்ந்த குமார் (41) ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட, ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர், பழைய பணத்திற்கு புதிய பணத்தாள்களை தருவதாக இருந்த ராஜேஷ் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.