ADVERTISEMENT

‘கண்ணனும் நான்தான்! சிவஞானமும் நான்தான்!’- கலெக்டர்களின் கையெழுத்திட்டு போலி அரசுப்பணி ஆணை! 

11:01 AM Jan 24, 2020 | santhoshb@nakk…

‘நான்தான் கலெக்டர்; நான் வழங்குவதே பணி ஆணை!’எனப் போலி கையெழுத்திட்டு, 10- க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.30 லட்சம் வரை மோசடி செய்திருக்கிறார் நாகேந்திரன். இத்தனைக்கும் இவர், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர். விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்த நாகேந்திரன், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலா ரூ.3 லட்சம் வீதம், 10-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒரு கையில் பணம் வாங்கிக்கொண்டு, மறுகையால் சுடச்சுட போலியான அரசுப்பணி ஆணை வழங்கியிருக்கிறார். தற்போதைய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், முன்னாள் ஆட்சியர் சிவஞானம் ஆகியோர் கையெழுத்துக்களை நாகேந்திரனே போட்டு, அரசுப்பணி ஆணை வழங்கியிருக்கிறார்.

பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் நாகேந்திரனைத் தேடியிருக்கின்றனர். அப்போதுதான், நாகேந்திரன் விருதுநகரில் வசிப்பதை அறிந்தனர். அவரைப் பொறிவைத்துப் பிடிப்பதற்காக, “இன்னும் 3 பேருக்கு அரசு வேலை வாங்கித் தரவேண்டும்.”என்று கூறி, குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைத்தனர். தலைக்கு ரூ.3 லட்சம் வீதம், மொத்தமாக ரூ.9 லட்சம் கிடைக்கும் என்ற திட்டத்தோடு, அந்த இடத்துக்கு வந்த நாகேந்திரனை வளைத்துப் பிடித்து, விருதுநகர் மேற்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து, விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, நாகேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT