Skip to main content

‘கண்ணனும் நான்தான்! சிவஞானமும் நான்தான்!’- கலெக்டர்களின் கையெழுத்திட்டு போலி அரசுப்பணி ஆணை! 

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

‘நான்தான் கலெக்டர்; நான் வழங்குவதே பணி ஆணை!’எனப் போலி கையெழுத்திட்டு, 10- க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.30 லட்சம் வரை மோசடி செய்திருக்கிறார் நாகேந்திரன். இத்தனைக்கும் இவர், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர். விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்த நாகேந்திரன், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலா ரூ.3 லட்சம் வீதம், 10-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்துள்ளார். 

fake collector signature nagendran virudhunagar police arrested

ஒரு கையில் பணம் வாங்கிக்கொண்டு, மறுகையால் சுடச்சுட போலியான அரசுப்பணி ஆணை வழங்கியிருக்கிறார். தற்போதைய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், முன்னாள் ஆட்சியர் சிவஞானம் ஆகியோர் கையெழுத்துக்களை நாகேந்திரனே போட்டு, அரசுப்பணி ஆணை வழங்கியிருக்கிறார். 
 

பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் நாகேந்திரனைத் தேடியிருக்கின்றனர். அப்போதுதான், நாகேந்திரன் விருதுநகரில் வசிப்பதை அறிந்தனர். அவரைப் பொறிவைத்துப் பிடிப்பதற்காக, “இன்னும் 3 பேருக்கு அரசு வேலை வாங்கித் தரவேண்டும்.”என்று கூறி, குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைத்தனர். தலைக்கு ரூ.3 லட்சம் வீதம், மொத்தமாக ரூ.9 லட்சம் கிடைக்கும் என்ற திட்டத்தோடு, அந்த இடத்துக்கு வந்த நாகேந்திரனை வளைத்துப் பிடித்து, விருதுநகர் மேற்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.   

இதுகுறித்து, விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, நாகேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Chief Secretary's Important Instructions to Government Officials

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் ஏனைய துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு  தலைமை செயலாளர் சிவ தாஸ் மீனா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், “பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், நகரின் ஏனைய பகுதிகளிலும் சாலைகள் மற்றும் தெருக்கள் மற்றும் திறந்தவெளிகளை போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்திய பின்னர், பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும். பூச்சிக்கொல்லி தெளித்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். மின்சாரம் தடைபட்ட இடங்கள் மற்றும் தெருக்களைக் கண்டறிந்து, மீதமுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இலை தழைகள் மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட வேண்டும்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்துடன் இணைந்து செயல்படுவதுடன், கூடுதல் பணியாக கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும் ஜெட் ரோடிங் இயந்திரங்கள், அதிக திறன் கொண்ட உறிஞ்சி இயந்திரங்கள் மற்றும் கழிவுநீரகற்றும் கொள்கலன் ஊர்திகளை (sewerage Tankers) ஏனைய இடங்களிலிருந்து வரவழைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரியவாறு பயன்படுத்த வேண்டும்.

Chief Secretary's Important Instructions to Government Officials

பால் விநியோகம் மற்றும் பிற இன்றியமையாப் பொருட்களின் இருப்பினைக் கணக்கிடுங்கள். எந்தவொரு வணிகரும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையைக் (MRP) காட்டிலும் கூடுதல் விலையில் பொருட்களை விற்பனை செய்வதில்லை என்பதை உறுதி செய்யவும். நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையைக் காட்டிலும் அதிக விலை வைத்து பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும். பொதுமக்களின் நலன்கருதி, தோட்டக்கலை மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 150 நடமாடும் காய்கறி கடைகளை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காய்கறிகளுடன் சேர்த்து பாலையும் விற்பனையாளர்கள் விற்பனை செய்வார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் திறக்கப்படும். எனவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் அகற்றப்பட வேண்டும். அனைத்து பொதுகழிப்பறைகளும், சமுதாய கழிப்பறைகளும் சுகாதாரமான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தெருவிளக்குகள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்” என அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். 

Next Story

பழங்குடியினருக்கு வீடுகட்டுவதில் மோசடி; ஆட்சியரிடம் பரபரப்பு புகார்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

complaint to collector that there is fraud construction of houses for tribals

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது காடாம்புலியூர். இந்த ஊராட்சியில் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின்  கீழ்  விளிம்பு நிலையில் உள்ள வீடற்ற பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி அந்த ஊரில் வசித்து வந்த 6 பழங்குடி இருளர் இன குடும்பத்தினருக்கு வீடு கட்டுவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் ஒப்புதல் அனுமதி அளித்தனர். அதன்படி தற்போது அந்த இடத்தில் ஆறு வீடுகள் கட்டப்பட்டு தளம் ஒட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கான பணிக்கான உத்தரவு கடிதத்தில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகர்கள் பயனாளிகளின் கையொப்பங்களை அவர்களே போட்டுக்கொண்டு வீடுகள் கட்டியுள்ளனர். 

 

இந்த நிலையில் பயனாளிகள் அனைவரும் கைநாட்டு வைப்பவர்கள் என்பதும், பயனாளிகளின் பெயரை கையொப்பமாக அலுவலர்களே போட்டுக்கொண்டதும் அம்பலமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து முறைகேடு செய்து போலி ஆவணம் தயாரித்த அலுவலகர்களை பணி நீக்கம் செய்யக்கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.