/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tnstc-union-art-our_0.jpg)
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி இருந்தனர்.
இதற்கான பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை பல்லவன் இல்லத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை மீண்டும் இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர்ரமேஷ் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாததால் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து சிஐடியூ சவுந்தரராஜன் தெரிவிக்கையில், “அரசு, போக்குவரத்துத்துறை ஊழியர்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது. எங்களது கோரிக்கைகள் மீது இப்போதைக்கு முடிவெடுக்க முடியாது என அரசு கூறியுள்ளது. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தமிழக அரசின் பதிலில் திருப்தி ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.
மேலும் இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “தொ.மு.ச உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை ஏற்பதாக அரசு தரப்பில் தெரிவித்துவிட்டோம். பொங்கலுக்கு பின் மற்ற கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கலாம் எனக் கூறியும் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை அறிவித்துவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)