
சேலத்தில் ரவுடிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். சேலம் கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் வினோத்குமார் (26). ரவுடியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த தன் நண்பர்களான மணிகண்டன் (26), பிரதாப் (23), உதயகுமார் (17) ஆகியோருடன் திங்கள்கிழமை (06.09.2021) இரவு காளிகவுண்டர் காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 15 பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் வந்திறங்கியது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சட்டென்று அந்த கும்பல், கத்தி, வீச்சரிவாளால் வினோத்குமார் உள்ளிட்ட 4 பேரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.
ரத்த வெள்ளத்தில் நான்கு பேரும் சரிந்ததை அடுத்து, அந்தக் கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டது. இதில் நான்கு பேருக்கும் தலை, கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான்கு பேரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர்களில், வினோத்குமார் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்தக் கொலை, ரவுடிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நடந்திருப்பது தெரியவந்தது.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி செல்லத்துரையை கூலிப்படையினர் வெட்டிப் படுகொலை செய்தனர். அவருடைய மாமியார் பேபிக்கு, எதிர் தரப்பைச் சேர்ந்த ரவுடி ஜானின் கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜானின் கூட்டாளிகள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் செல்லத்துரை தரப்புக்கும், ஜான் தரப்புக்கும் இடையே மேலும் பகை மூண்டது. இந்நிலையில்தான் ஜானின் கூட்டாளிகள், செல்லத்துரை தரப்பைச் சேர்ந்த நான்கு பேரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டுச் சென்றதும், அதில் வினோத்குமார் பலியானதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொலையாளிகளைப் பிடிக்க சேலம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
அதன்பேரில் சங்ககிரி பகுதியில் டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சங்ககிரி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த 6 பேரை மடக்கிப்பிடித்தனர். அவர்கள்தான் கிச்சிப்பாளையம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்வர்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்ற கிச்சிப்பாளையம் காவல் நிலைய காவல்துறையினர், சங்ககிரி விரைந்து சென்று, பிடிபட்ட கும்பலை சேலத்திற்குக் கொண்டு வந்தனர். விசாரணையில், அவர்கள் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சதாம் உசேன் (24), பேரன் என்கிற விஜி (22), கமல் (20), சஞ்சய் (20), நந்தகுமார் (22), மாதவன் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இது ஒருபுறம் இருக்க, இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பழனிசாமி உள்பட நான்கு பேரை காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். இவர்கள் பத்து பேரிடமும் தீவிர விசாரணை நடந்துவருகிறது. ரவுடிகளுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் அடுத்தடுத்து மேலும் சில கொலைகள் விழும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் கிச்சிப்பாளையம் பொதுமக்கள் பதற்றத்தில் உள்ளதோடு, ரவுடிகளின் கொட்டத்தைக் காவல்துறையினர் அடியோடு ஒடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.