alangudi

Advertisment

சீனாவில் கரோனா தொற்று பரவி வரும் போது இந்தியாவில் உள்ள கிராமங்களில் எச்சரிக்கை நடவடிக்கையாக முகக் கவசம் அணிந்து சென்றனர். தொடர்ந்து தமிழ்நாட்டில் எங்கோ ஒரு இடத்தில் தொற்று ஏற்பட்ட தகவல் வெளியாகும் போதெல்லாம் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்பட்டனர். அந்த நேரங்களில் 8 கி.மீ சுற்றளவிற்கு முடக்கப்பட்டது. முழு ஊரடங்கு, போக்குவரத்து முடக்கம். அதன் பிறகு எல்லாமே குறைந்துவிட்டது. இப்போது அடுத்த வீட்டில் கரோனா தொற்று என்றாலும் அந்த அச்சம் போய்விட்டது.

இந்த நிலையில் தான் கடந்த ஜூலை மாதம் முதல் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கு ஏற்ப இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் மட்டும் 2,000 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஆகஸ்ட் மாதத்திலும் எண்ணிக்கை உயர்ந்து 3,670 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக கிராமங்களிலும் வேகமாகக் கரோனா தொற்று உயரந்து வருகிறது. போதிய பாதுகாப்பு இல்லாமல் மக்கள் வெளியில் நடமாடுவதே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் தான் முகக் கவசம் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த மாதம் கீரமங்கலம் போலிசார் முகக் கவசம் அணியாமல் செல்வோரை நிறுத்தி முகக் கவசமும், கூடவே ஒரு மரக்கன்றும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Advertisment

இப்போது திருவரங்குளம் ஒன்றியத்தில் கரோனா தொற்று அதிகரிப்பதையடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் அருள் மற்றும் சுகாதார துறையினருடன் ஆலங்குடி போக்குவரத்து போலிசாரும் இணைந்து ஆலங்குடி பகுதியில் முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக செல்வோரை நிறுத்தி அருகில் உள்ள தற்காலிக கரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்து அவர்களின் விவரங்களைச் சேகரித்துக் கொண்டு அனுப்பி வைக்கின்றனர். இதனால் தற்போது ஆலங்குடி பகுதிக்குச் செல்வோர் முகக் கவசத்துடன் சென்று வருகின்றனர். அதாவது இரண்டு நாட்களில் சுமார் 150 பேருக்கு மேல் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.