புவனகிரி அருகே வட தலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் யோகேஷ்வரன்( 7) இவர் அதே பகுதியில் உள்ள மருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் திங்கட்கிழமை பள்ளிக்குச் சென்ற சிறுவன் விளையாடும் போது கீழே விழுந்து விட்டான் அதனால் கண்ணில் அடிபட்டுவிட்டது என மாலையில் பள்ளி விடும் போது ஆசிரியர்கள் கூறியுள்ளனர். உடனடியாக அவரது பெற்றோர்கள் மகனை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் சிறுவனின் கண் கருவிழி சேதம் அடைந்துள்ளது என மருத்துவர்கள் கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிறுவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவரது பெற்றோர்கள்,உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய செயலாளர் காளி.கோவிந்தராஜ் தலைமையில் செவ்வாய் கிழமை மாலை மருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அந்த புகாரில் என் மகன் விளையாடிக் கொண்டிருந்தபோது 8-ம் வகுப்பு அண்ணன் கண்ணில் குச்சியால் குத்திவிட்டார் என வீட்டில் கேட்டபோது கூறினான். எனவே இது குறித்து விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
அடிபட்டவுடன் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கவில்லை. வீட்டிற்கு அழைக்க வரும்போதுதான் கூறுகிறார்கள். ஆசிரியர்களிடமும் விசாரிக்க வேண்டும் என்கின்றனர்.