
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இத்தகைய சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் 'அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2 - 3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது' என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் 'தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். இன்று (23-05-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 25, 26 ஆம் தேதிகளில் கோவை மற்றும் நீலகிரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு தலா ஒரு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலோ அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு மையங்களுக்கோ பேரிடர் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.