
திருவண்ணாமலை கிரிவல பாதையில் நபர் ஒருவர் சாமியார் போல ருத்ராட்சம் அணிந்து கொண்டு மது அருந்திவிட்டு அங்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் நோக்குடன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் விசேஷ நாட்களில் அதிகப்படியான மக்கள் கூடுவர். குறிப்பாக பௌர்ணமி தினங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கிரிவலத்தில் கலந்து கொள்வர். இந்நிலையில் இடுக்கு பிள்ளையார் கோவில் பகுதியில் கிரிவலத்திற்கு வரும் வெளி மாநில மக்களை குறிவைத்து சாமியார் போல நபர் ஒருவர் விபூதி கொடுத்து பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் காவி உடையுடன் ருத்ராட்சம் அணிந்து முகம் முழுவதும் திருநீறு பூசியபடி சாமியார் கெட்டப்பில் உள்ளார். அங்கு வரும் பக்தர்களுக்கு வாண்ட்டாக தன் கையில் உள்ள திருநீறை பூசிவிட்டு பணம் கேட்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதுகுறித்து வெளியான வீடியோவில் 'குடிச்சிட்டு கிரிவலப் பாதையில் ஏன் இப்படி தொல்லை கொடுக்கிறீர்கள்' என கேட்க, அந்த நபரோ 'உடல் முழுக்க புண்' என பதில் அளிக்கிறார். சாமியார் என்று சொல்கிறீர்கள். ருத்ராட்சம் போட்டு இருக்கீங்க ஏன் குடிக்கிறீங்க. குடிப்பது உங்கள் விருப்பம் ஆனால் பணம் கேட்டு பப்ளிக்க எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க' என கேள்வி எழுப்பும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.