Skip to main content

அரசு வேலை ஆசை காட்டி வாலிபரிடம் 4 லட்சம் ரூபாய் சுருட்டல்!

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

Extortion of 4 lakh rupees from a teenager showing desire for a government job!

 

சேலத்தில், அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

சேலம், அஸ்தம்பட்டி கன்னங்குறிச்சி முதன்மை சாலையைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகன் சதீஷ் (39). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2015ம் ஆண்டு, தனது தந்தை மூலமாக இடைப்பாடி அருகே உள்ள எருமைப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது. 


சண்முகம் என்பவர், அப்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளுடன் நன்கு தொடர்பு உள்ளதாகவும், அதை வைத்து அரசாங்க வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சதீஷ், அவர் கேட்டபடியே அரசாங்க வேலைக்காக 4.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் சண்முகம், தான் வாக்குறுதி அளித்தபடி அரசாங்க வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து சதீஷ், சங்ககிரி டி.எஸ்.பியிடம் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணைக்கு ஆஜரான சண்முகம் முதல்கட்டமாக சதீஷிடம் 50 ஆயிரம் ரூபாய் மட்டும் டி.எஸ்.பி முன்னிலையில் திருப்பிக் கொடுத்துள்ளார். 


மீதப்பணத்தை, பத்து நாளில் கொடுத்து விடுவதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் சண்முகம், பணத்தைத் தராமல் மீண்டும் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜூலை 7ம் தேதி, கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகே சண்முகத்தை பிடித்துக்கொண்ட சதீஷ், தனக்குக் கொடுக்க வேண்டிய 4 லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது சண்முகம், பணத்தை தர முடியாது என்று கூறியுள்ளார். 


இதையடுத்து சதீஷ், கொங்கணாபுரம் காவல்நிலையத்தில் அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் 4 லட்சம் ரூபாய் ஏமாற்றி விட்டதாக சண்முகம் மீது புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்