
திட்டக்குடி அருகே போன் எஸ்.எம்.எஸ், மூலம் தகவல் அனுப்பி பெண்ணிடம் சுமார்,15 ஆயிரம் ரூபாய் நூதன முறையில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மனைவி முத்தம்மாள்(29).கூலி வேலை பார்த்து வருகிறார். இன்று காலை முத்தம்மாள் செல்போனுக்கு இந்தியன் வங்கியிலிருந்து பேசுகிறோம் தமிழக அரசு குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக உங்களது செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உடனே எங்களிடம் கூறவும் என்று கேட்டுள்ளனர்.
இதை உண்மை என்று நம்பிய முத்தம்மாள் தனது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை அந்த நபரிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் முத்தம்மாள் வங்கி கணக்கிலிருந்து நான்கு முறை பணம் எடுத்தது தெரியவந்துள்ளது . வங்கிக்கு சென்று பார்த்த போது முத்தம்மாள் வங்கி கணக்கிலிருந்து 15,699 ரூபாயை மர்மநபர்கள் நூதன முறையில் திருடியது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த முத்தம்மாள் இதுகுறித்து வங்கிக்கு சென்று முறையிட்டுள்ளார். அங்கிருந்த வங்கி பணியாளர்கள் இது குறித்து ஆய்வு செய்துள்ளனர். மேலும் உடனடியாக கடலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
Follow Us