Skip to main content

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Extension of time for payment of electricity bill
கோப்புப்படம்

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த நாளைய (07.12.2023) தினம் கடைசி நாளாக இருந்தது. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அபராதம் இல்லாமல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் எனக் கூடுதல் கால அவகாசம் வழங்கி மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Minister  thangam-thennarasu presented the budget

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு ‘காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்’ என்ற திருக்குறளைக் கூறி தனது பட்ஜெட் உரையைத் தொடங்கி அதற்கான விளக்கத்தையும் தெரிவித்தார். அதில் ‘குடிமக்கள் எளிதில் அணுகக்கூடியவராகவும், கடுமையான சொற்களை கூறாது ஆட்சி புரிந்து வரும் அரசனினை உலகமே போற்றும். அதேபோல் கடைக்கோடி மக்களும் எளிதில் அணுகக்கூடியவராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டுக்கு பெருமை’ எனத் தெரிவித்தார்.

மேலும் பட்ஜெட் உரையில், “நிதிநிலை அறிக்கையை தயாரிக்க வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி. இந்தியாவின் 2 வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டது தமிழ்நாடு. தமிழக அரசின் நலத்திட்டங்கள் தமிழர்களை தலைநிமிரச் செய்துள்ளன. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் தமிழர்களை தலைநிமிரச் செய்தன, செய்துள்ளன. 100 ஆண்டுகளுக்கு முன்பு 1924ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது. 1990 இல் கலைஞர் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சார அறிவிப்பு, விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

தமிழின் இரட்டைக் காப்பியங்காளான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளுக்கு சென்றடையும் வகையில் இந்த நூல்களை மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். செழுமையான தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லவும், சிறந்த பண்ணாட்டு அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் தமிழில் பல படைப்புகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியை 2 வது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தியது. இதில் 40 நாடுகளில் இருந்து 75க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்க்க 483 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட மொத்தம் 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.

தமிழ் மொழியை நவீனப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை, முசிறி, தொண்டி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு நடத்தப்படும். ரூ. 65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும். கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும். சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்.  கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்படும். கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்ட ரூ. 356 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.