
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் முதல் தவணையாக கல்விக் கட்டணம் செலுத்த, செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்டணம் வசூலிக்கத் தடைவிதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில், தனியார் பள்ளிகளில் 40 சதவீதம் முதல் தவணைக் கட்டணத்தைச் செலுத்த செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார், காணொலிக் காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது, கூடுதல் கட்டணம் வசூலித்ததாக இதுவரை 75 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்த 75 பள்ளிகளில், இதுவரை 29 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மற்ற பள்ளிகள் மீதான புகார்கள் விசாரணையில் உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு உத்தரவை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பள்ளிக் கல்விக் கட்டண விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டுத்தெரிவித்ததோடு, நீதிமன்ற உத்தரவை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்மீது அரசு நடவடிக்கையோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)