
தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு என்பது அதிகமாக உள்ளது. எனவே இந்த 11 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள், டாக்சிகள் இ-பதிவுடன் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத ஊழியர்களுடன் திங்கட்கிழமை (07.06.2021) முதல் செயல்படலாம். தனியாக செயல்படும் மளிகை கடை, பலசரக்கு கடை, காய்கறிக் கடைகள், இறைச்சி மீன்கள் விற்பனைக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மளிகை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி. காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படலாம். சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது. ஹார்டுவேர், மின் பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படலாம். சைக்கிள், பைக் பழுதுநீக்கும் கடைகள் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படலாம். தீப்பட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றலாம். எலெக்ட்ரீஷியன், பிளம்பர், இயந்திரங்கள் பழுது பார்க்கும் தொழில் செய்வோருக்கு அனுமதி. சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 சதவீதம் டோக்கன்கள் விநியோகித்து பத்திரப் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 10 சதவீதம் பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான தடை தொடரும், பேருந்து போக்குவரத்து, சென்னை புறநகர் ரயில், மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அனுமதி இல்லை.
டாக்ஸிகளில் 3 பயணிகளும், ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக செல்ல சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் வழங்கும் இ-பதிவு பெற்று பயணிக்கலாம். மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால் நடமாடும் காய்கறி கடைகள் தொடர்ந்து இயங்கும். வீட்டுக்கு அருகே உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்குங்கள். பைக்கில், காரில் சென்று வாங்காதீர்கள் எனவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.