Extension for the 31st time; Court action

Advertisment

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.