தமிழ்நாடுஅறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கரோனா காலத்திலும் கோவில் நிர்வாகம் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கரோனா நோய் தொற்றுக்கு முன்பு சிறிய மற்றும் பெரிய கோவில்களில் 50 முதல் 500 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக நாள் முழுவதும் கோவில்களில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக இன்று (16.09.2021) திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், காணொளி காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்ட அன்னதான நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னதாக சமயபுரம் கோவிலின்அன்னதான கூடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமையல் அறையைசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.