Explosion in firecrackers factory- 5 people lost their lives

விருதுநகர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கோட்டூர் அடுத்துள்ள அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த சாய்நாத் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பட்டாசு சாலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை எடை பார்க்கும் பொழுது மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் 4 கெமிக்கல் அறைகள் முழுவதுமாக சிதறி சேதமடைந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி தற்போது வரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உடனடியாக தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர். சாத்தூர் மற்றும் விருதுநகரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகரில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில்ஏற்படும் வெடி விபத்து சம்பவங்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வரும் நிலையில் இந்த ஆண்டில் ஏற்பட்ட முதல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.