Skip to main content

“ஆக்ஸிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து விளக்கமளிக்க வேண்டும்” - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.! 

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

Explain about sending oxygen to other states Court order to the government

 

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துகள் ஆகியவற்றை பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக பிற்பகல் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ள நிலையில், குஜராத் போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

இந்தச் சூழலில், தமிழகத்தில் ரெம்டிசிவர் மருந்துகள் தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவிற்கு உள்ள நிலையில், அதனை தமிழக அரசின் அனுமதி பெறாமல் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. 

 

இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. அதில் தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக இன்று (22.04.2021) காலை கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மற்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்துக்கும் ஏற்படக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டே தற்போதைய நிலை குறித்து அறிய விரும்புவதாக தெரிவித்தார்.

 

தற்போதைய சூழலில் மேலும் குழப்பம் ஏற்படுத்துவதற்காக இந்த வழக்கை தாமாக முன் வந்து எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். மேலும், இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, இன்று பிற்பகல் தெரிவிக்கும்படி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம்  நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்