
சென்னை எழும்பூரில் திரையரங்கில் காலாவதியான குளிர்பானம் விற்கப்பட்டதாக எழுந்த புகாரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நேற்று திரைப்படம் பார்க்க வந்த பெண் ஒருவர் இடைவேளை நேரத்தில் விற்கப்பட்ட குளிர்பானத்தை வாங்கி அருந்தியுள்ளார். தன்னுடைய குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். அப்போது குளிர்பானம் காலாவதியாக இருந்தது தெரியவந்தது. மேலும் அதில் மது வாசனை வந்ததால் குளிர்பானத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் கொடுத்திருந்தார்.
புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திரையரங்கில் உள்ள கடையில் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிறிய பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புகார் அளித்திருந்த அந்த குறிப்பிட்ட குளிர்பான நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு இடம் ஆகியவை குறித்து சோதனை மற்றும் விசாரணை நடைபெற்றது.