ADVERTISEMENT

பழமையான கோயிலை நவீன தொழில்நுட்பம் மூலம் இடமாற்றம் செய்யும் வல்லுநர்கள்!  

12:27 PM Dec 11, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

அம்மாபேட்டையில் 150 ஆண்டு பழமையான கோயிலை நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்கிகளை வைத்து நவீன தொழில்நுட்பத்தில் இடமாற்றம் செய்தனர். கும்பகோணம் அடுத்துள்ள, அம்மாபேட்டையில் 150 ஆண்டு பழமையான நாகத்தி வீரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கருவறை மண்டபம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி இடிக்கும் முயற்சியில் ஒப்பத்தக்காரர்கள் முனைந்தனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

பொதுமக்களின் நலன் கருதி 150 ஆண்டு பழைமையான கோயில் கருவறை மண்டபத்தை இடிக்க மனமில்லாமல் மாற்றுவழியில் கோயில் கருவறை மண்டபத்தை அகற்ற முடிவு செய்தனர் அந்தப் பகுதி மக்கள். இதுகுறித்து கட்டட தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஆலோசனையைக் கேட்ட கிராம மக்கள், கட்டடத்தை சேதம் எதுமின்றி அப்படியே நவீன தொழில்நுட்பத்தில் ஜாக்கிகள் உதவியுடன் கருவறை மண்டபத்தை நகர்த்தி வைக்க முடியும் என கட்டட வல்லுநர்கள் கிராம மக்களுக்குத் தெரிவித்தனர். இதனையடுத்து நவீன தொழில்நுட்பத்தில் கட்டடத்தை நகர்த்த முடிவு செய்து அதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு கோயில் கருவறை மண்டபம் நகர்த்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர் கூறுகையில், “அம்மாபேட்டை கிராம மக்கள் தங்களது கிராமத்திலுள்ள கோவில் கருவறை மண்டபத்தை 5 அடி தூரத்தில் இடமாற்றம் செய்தும், 7 அடி உயரம் உயர்த்தியும் தரும்படி கேட்டுக் கொண்டனர். இதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து 11 தொழில்நுட்ப ஊழியர்களை வரவழைத்து கோயில் கருவறை மண்டபத்தை சுற்றி பள்ளங்கள் தோண்டப்பட்டு 100க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் பொருத்தப்பட்டு கருவறை மண்டபம் நகர்த்தும் பணி நடந்துவருகிறது. அதிகபட்சமாக இது 35 நாட்களில் நகர்த்தி முடித்து வைக்கப்படும்” என்றார். கோயில் கருவறை மண்டபம் நகர்த்தப்பட்டு வருவதை அப்பகுதியைச் சேர்ந்த பல கிராமத்து மக்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனும் சாரை சாரையா வந்து பார்த்து செல்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT