Advertisment

தனியார் பள்ளிகளில் பொருட்காட்சி! - மாணவர்களிடம் திணிக்கப்படும் நுழைவுச்சீட்டு!

dfg

தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களால் கல்வி வணிகமயமாகிவிட்டது என விமர்சிக்கப்படும் நிலையில், பொருட்காட்சி என்ற பெயரில் பள்ளிவளாகங்களில் அனைத்து வியாபாரமும் அமோகமாக நடக்கிறது. பொருட்காட்சிக்கான நுழைவுச் சீட்டை வாங்கியே ஆகவேண்டும் என மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டாயப்படுத்தப்படுவது தொடர்ந்து நடக்கிறது என விருதுநகரில் குமுறல் வெளிப்பட்டுள்ளது. “பள்ளிக்கட்டணம் செலுத்தும்போதே பொருட்காட்சி நுழைவுச்சீட்டுக்கான ஒருநாள் கட்டணமாக ரூ.250-ஐ ‘மிசலேனியஸ்’ என்ற பெயரில் மாணவர்களிடம் வசூலித்துவிடுகின்றனர். இது எந்த வகையில் நியாயம்? இதைத் தட்டிக்கேட்டால் அதிகாரிகளை வைத்து மிரட்டுகிறார்கள். நகர்மன்ற உறுப்பினர் குடும்பங்களுக்கு இலவச பாஸ் கொடுத்திருக்கிறார்கள். சமுதாய மக்களின்தியாகத்தால் உருவான கல்வி நிறுவனத்தை நடத்துபவர்கள், இப்படி தாராளம் காட்டுவதற்கு யாரிடம் அனுமதி பெற்றார்கள்?” என்கிற ரீதியில் உள்ளூர் பிரமுகரான முருகவேல் பள்ளி நிர்வாகத்தினரைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிய ஆடியோ ஊருக்குள் பரவி உஷ்ணத்தைக் கிளப்பியது.

Advertisment

நாம் முருகவேலைத் தொடர்புகொண்டோம். “இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை..” என்று தயக்கம் காட்டினார். சுமார் 6000 மாணவர்கள் படிக்கும் வரலாற்று சிறப்புமிக்க கே.வி.எஸ். பள்ளிகளில், ஆசிரியர்களிடம் ரூ.600 பெற்று, தலா இரண்டு பொருட்காட்சி நுழைவுச் சீட்டுகளை கையில் திணித்துவிட்டனர் என்றும் தகவல் வர, கே.வி.எஸ். பள்ளிகளின் நிர்வாகக்குழு செயலாளர் ராஜாவை தொடர்புகொண்டோம். “பொருட்காட்சிக்காக மாணவர்களிடமிருந்தோ, ஆசிரியர்களிடமிருந்தோ கட்டாயமாகப் பணம் பெறப்படவில்லை. பெற்றோர் தரப்பிலிருந்து புகார் எதுவும் வந்திருக்கிறதா? ஆசிரியர்கள் யாராவது குற்றம் சொல்கிறார்களா?” என்று மறுத்துப் பேசியவரிடம் “நகர்மன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினரை இலவசமாக அனுமதித்தது விமர்சிக்கப்படுகிறதே?” எனக் கேட்ட மாத்திரத்தில் லைனைத் துண்டித்தார்.

Advertisment

ghj

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பேசியபோது “74 வருடங்களாக அந்தப் பள்ளியில் பொருட்காட்சி நடந்துவருகிறது. இப்போதுதான், விவகாரமாகப் பேசப்படுகிறது. பெற்றோர் தரப்பிலிருந்து எழுத்துமூலமாகப் புகார் எதுவும் வரவில்லை. ஆனாலும், இதுகுறித்து விசாரிக்கிறேன்.” என்று முடித்துக்கொண்டார். தனியார் பள்ளிகளின் கெடுபிடிகளுக்கு எதிராக பெற்றோரோ, மாணவர்களோ, ஆசிரியர்களோ துணிந்து குரல் கொடுக்காதது, தொடர் முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

schools
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe