Advertisment

"ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தீர்மானம் நிறைவேற்றுக"- கமல்ஹாசன் வலியுறுத்தல்!

publive-image

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (15/08/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரழிவை உருவாக்கும் திட்டங்களும், தொழிற்சாலைகளும் ஏன் வளரும் நாடுகளில் உருவாக்கப்படுகின்றன? என ஒரு செனட் சபை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, 'மூன்றாம் உலக நாடுகளில் தான் உயிர்களின் விலை மலிவானது' என்று பதில் வந்தது.

Advertisment

ஐரோப்பாவில் இயற்கை வளங்களைச் சீரழிக்கும் ஒரு திட்டம் வரும் என்றால் அதற்கு மிகப்பெரிய விலையை அபராதமாகக் கொடுக்க நேரிடும். ஆகவே, சூழலைப் பாதிக்கும் எந்த உற்பத்தியையும் மூன்றாம் உலக நாடுகளில் தான் ஊக்குவிப்பார்கள்.

Advertisment

இந்த மனோபாவத்திற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதன் அடையாளங்களுள் ஒன்று ஸ்டெர்லைட். பின்தங்கிய பகுதிகளில் பேராபத்தை விளைவிக்கும் தொழிற்சாலைகளை அனுமதித்து செயல்படுத்தி விடுகிறார்கள். பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி தேவை தான், வியாபாரம் தேவை தான். ஆனால் அது மக்களின் வாழ்வை அழித்துத்தான் நிகழ வேண்டும் என்றால் அது பிள்ளைக்கறி கேட்பதற்கு ஒப்பானது.

இந்த ஆலை இங்கே அமைய வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை. வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு என அவர்கள் எளிதாக ஏமாற்றப்பட்டார்கள். ஆலையால் ஏற்பட்ட பொருளாதார அனுகூலங்களை விட ஆலை வெளிப்படுத்திய மாசுகளும், கழிவுகளும் இயற்கைக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்படுத்திய பாதிப்புகள் மிக மிக அதிகமாக இருந்தன. எதை விலையாகக் கொடுத்து எதைப் பெற்றிருக்கிறோம் என்பதை மக்களே உணர்ந்து ஒன்று திரண்டு போராடும் போது அந்தக் குரல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. இன்றும் அந்த இரும்புக்கரம் ஓய்ந்து விடவில்லை. எப்படியாவது ஆலையைத் திறந்து மீண்டும் உற்பத்தியைத் துவங்கி விட முடியாதா என அது சகல வழிகளிலும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறது.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையால் சந்தித்த, சந்திக்கும், சந்திக்கப் போகும் துயரங்கள் அனைவரும் அறிந்தவை. எதிர்வரும் சந்ததிகளையும் பாதிக்கும் அளவிற்கு தீ விளைவுகள் அங்கே நிகழ்ந்துவிட்டன. இந்த ஆலையில் இருந்து 82 முறை விஷவாயு கசிந்ததாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியதும், விதிமுறைகளை மீறி சூழலைச் சீரழித்திருக்கிறது என உச்சநீதிமன்றமே கண்டித்து 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததும் வரலாறு.

சுமார் 20,000 பேர் மூன்றாண்டுகளாகப் போராடி 13 பேர் தங்களது இன்னுயிரை நீத்த பிறகுதான் இந்த உயிர்க்கொல்லி ஆலையை அடைக்க முடிந்தது. நிரந்தர ஊனமானவர்கள், வழக்குகளால் வாழ்க்கையை இழந்தவர்களின் எண்ணிக்கையை இழந்தவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கு இல்லை. கடந்த ஓராண்டாகத்தான் தூத்துக்குடி மக்கள் விஷக்காற்றை சுவாசிப்பது ஓரளவேனும் குறைந்திருக்கிறது. 'ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றும் தீர்மானத்தை' நிறைவேற்ற வேண்டும் என்றும் தாமிர உற்பத்திக்கான நெறிமுறைகளைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றும் 2018- ஆம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தினார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளில் உறுதியளித்தப்படி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இந்த உயிர்க்கொல்லி ஆலையை நிரந்தரமாக அகற்றும் சிறப்புத் தீர்மானத்தை இயற்ற வேண்டும். தீர்மானத்தின் நகல் உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். அத்துடன், சொந்த ஆதாயங்களுக்காக விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு ஸ்டெர்லைட் ஆலை சர்வ சுதந்திரமாகச் சூழலைச் சீரழிக்க அனுமதித்த அரசு அதிகாரிகள் மீதும் நீள் துயிலில் இருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்குக் காரணமான் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும், இப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்குத் தூத்துக்குடியிலேயே நினைவகம் அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sterlite plant Thoothukudi Kamal Haasan Makkal needhi maiam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe