
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கீழ்ச் செருவாய் கிராமப் பகுதியில் உள்ளது வெலிங்டன் நீர்த்தேக்கம். இதன் முழு கொள்ளளவு இருபத்து ஒன்பது முக்காலடி. தற்போது 28அடி நீர் நிரம்பியுள்ளது. மேலும், இந்த ஏரிக்கு ஓடைகள் வழியாக வரும் மழை நீர் அதிக அளவு வந்துகொண்டிருப்பதால், உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவுசெய்தனர். அதன்படி நேற்று (21.11.2021) மாலை 3 மணியளவில் ஏரியின் வடிகால் பகுதியில் உள்ள மதகிலிருந்து 100 கனஅடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர்.
இந்த நீர் வடிகால் ஓடை வழியாக சிறுமூளை, பெருமூளை, நாவலூர், சாத்தன நத்தம், எறப்பாவூர் வழியாகச் சென்று மணிமுத்தாற்றில் கலக்கும். இதையடுத்து, மேற்படி கிராமங்களில் உள்ள மக்கள் வடிகால் ஓடையில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பாதுகாப்பாக இருக்கும்படி அந்தந்த கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலம் ஆட்டோ ரிக்ஷா வைத்து ஒலிபெருக்கி வழியாக எச்சரிக்கை அறிவிப்பு செய்துவருகிறார்கள். உபரி நீர் திறந்துவிடப்பட்ட வடிகால் பகுதியில் வெளியேறும் தண்ணீரில் பல வகையான மீன்கள் பாய்ந்து செல்கின்றன.
இதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் ஆபத்தை உணராமல் மீன்வலை மற்றும் வீடுகளில் இருக்கும் கொசுவலை ஆகியவற்றைப் பயன்படுத்தி மீன் பிடித்துவருகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லும் வாய்ப்பு இருப்பதால், அதிகாரிகள் காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.