




தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால கோட்டையான புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை கிராமத்தில் உள்ள சுமார் 1.62 கிமீ சுற்றளவும் 25 அடி உயரம் அகலம் கொண்ட பிரம்மாண்ட கோட்டை இன்றளவும் எஞ்சியுள்ளது. கோட்டை சுவரில் உள்ள செங்கற்கள் அளவில் பெரியதாக உள்ளது.
ஒரு செங்கல்லில் பூனையின் கால் தடம் பதிவாகியுள்ளது. மேலும், கோட்டைக்கு வெளியே உருக்கு ஆலைகளுக்கான குழிகளும், உருக்கு கழிவுகளும் ஏராளமாக காணப்படுகிறது. கோட்டையின் உள்ளே உள்ள நீர்வாவி குளத்திலிருந்து ஒரு தமிழி கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டில் கால்நடைகளைக் கொள்ளையடிக்க வந்தவர்களைப் போராடி விரட்டியபோது உயிர்நீத்த கனம் குமரன் என்ற போர் வீரனின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கல்வெட்டு எழுத்தாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோட்டை பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பேராசிரியர் இனியனை இயக்குநராக கொண்டு அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், சில குறிப்பிட்ட இடங்களில் ஸ்கேன் ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்டு, சகோதரர்களான கருப்பையா, சின்னத்துரை ஆகியோரின் நிலத்தில் இன்று (30.07.2021) 8 மீட்டர் நீளம், அகலத்தில் முதல் குழி தோண்டும் பணி துங்கியது. இதனை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து அங்கு மேலாய்வில் கிடைத்த பானை ஓடுகள், இரும்பு போன்றவற்றைக் காட்சிக்கு வைத்திருப்பதைப் பார்வையிட்டனர். இன்று அகழாய்வு தொடங்கிய நிலையில், சில நாட்களில் மேலும் பல தொல்பொருட்கள் கிடைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.