Ex-soldiers gathered in the collector's office!

Advertisment

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க் கூட்டம் இன்று (9ம் தேதி) நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகள் குறித்தான மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் வழங்கினர். அப்போது முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் திரண்ட வந்து மனு வழங்கினர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது; ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் சில கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தன. அதன்படி ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் மாதத் தவணையாக பணம் இரட்டிப்பு தருவதாக கூறினர். இதனை நம்பி நாங்கள் பல்வேறு திட்டங்களில் அவர்கள் கூறியவாறு பணத்தை முதலீடு செய்தோம். முதல் இரண்டு மாதம் அவர்கள் கூறியவாறு பணம் தந்தனர். ஆனால், அதன் பிறகு பணம் சரியாக வரவில்லை கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகிவிட்டது; இன்னமும் பணம் வரவில்லை.

இந்த மாதம் தருகிறோம், அடுத்த மாதம் தருகிறோம் என்று கூறி கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை பணம் வரவில்லை. இது சம்பந்தமாக பல்வேறு இடங்களில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளது. எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு அந்த நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு வர வேண்டிய பணத்தை பெற்று தந்து அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் மனு கொடுக்க வந்தவர்களில் ஒரு பெண் திடீரென ஆட்சியர் அலுவலகத்தின் முன் பகுதியில் சென்று ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மோசடி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என அவர் கண்ணீர் மல்க கோஷமிட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.